உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாராயணசாமி சொத்து கணக்கை காட்ட தயாரா? பா. ஜனதா சவால்

Published On 2022-03-24 15:02 IST   |   Update On 2022-03-25 08:27:00 IST
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சொத்து கணக்கை காட்ட தயாரா? என பா.ஜனதா தலைவர் சாமிநாதன் சவால் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அகில பாரத பா.ஜனதா மகளிர் நிர்வாகிகள் கூட்டம் (சனிக்கிழமை) ஓட்டல் அக்கார்டில் நடக்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான மகளிரணி தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். 

இதையொட்டி காமராஜர் சிலை அருகில் இருந்து மகளிர் பேரணி நடக்கிறது. இந்த பேரணி கம்பன் கலையரங்கில் முடிவடையும்.

 அங்கு முன்கள பணியாளர்கள், துப்புரவு பணியாளர்களும் கவுரவிக்கப்படுவர். பா.ஜனதா தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் விருதுகள் வழங்குகிறார். 

நாடு முழுவதும் உள்ள பா.ஜனதா மகளிரணியை வலுப்படுத்தும் நோக்கில் கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. புதுவையில் இந்த கூட்டத்தை நடத்த அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, தேசிய தலைவர் நட்டா ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
பா.ஜனதா தேசிய அமைப்பு செயலாளர் சந்தோஷ்ஜி புதுவை வருகிறார். அவர் தலைமையில் மாலை 5 மணிக்கி கட்சி தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது. 

காந்தி, சுபாஷ்சந்திரபோஸ் கண்ட கனவை பா.ஜனதா ஆட்சியில் நிறைவேற்றி வருகிறோம். ஊழலற்ற நிர்வாகத்தை நாடு முழுவதும் தருகிறோம். இதனால்தான் கருத்து கணிப்புகளை மீறி 5 மாநில தேர்தலில் பா.ஜனதா 4 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. புதுவையில் காவல்துறைக்கு நேர்மையான முறையில் காவலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

50 ஆண்டாக பின்தங்கியிருந்த புதுவை 10 மாதங்களில் பெஸ்ட் புதுவையாகிவிட முடியாது. 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும்போதுதான் புதுவையின் வளர்ச்சி கண்ணுக்கு தெரியும். முஸ்லிம் லீக் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள தி.மு.க.வுக்கு பா.ஜனதா பற்றி விமர்சிக்க தகுதியில்லை. 

முன்னாள் முதல் -அமைச்சர் நாராயணசாமி தனது சொத்து கணக்கை காட்ட தயாராக உள்ளாரா? பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் சொத்து கணக்கை காட்ட தயார். 
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News