உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியின் நிலைமை சற்றும் மாறவில்லை காங்கிரஸ் குற்றச்சாட்டு
என்.ஆர்.காங்கிரசை பலவீனப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு திட்டமிட்டு சதி செய்வதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மத்திய பா.ஜனதா மோடி அரசால் மாநிலத்திற்குத் தேவையான நிதிகள் தாராளமாக அனுப்பப்பட்டு அதன் மூலம் புதுவை மாநிலம் நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறி விடும் என என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியானது தேர்தலுக்கு முன்பு பிரசாரம் செய்து வாக்காளர்களை நம்பவைத்து வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்தனர்.
ஆனால், கூட்டணி அரசு அமைந்து ஒராண்டு ஆகும் நிலையிலும் புதுவையின் நிலைமை சற்றும் மாறவே இல்லை. இந்திய நிதிக் கமிஷனில் இன்றுவரை புதுவை மாநிலம் சேர்த்துக்கொள்ளப் படவில்லை. மின் வினியோகம் தனியார் மயமாக்குதலை தடுக்க முடியவில்லை.
மாநில அரசின் உரிமைகளையும் மற்றும் நிதியினையும் பறிக்க திட்டமிட்டு கொண்டு வரப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தின் கீழ், புதுவையின் கொஞ்சநஞ்ச பத்திர பதிவு வருவாயும் மத்திய அரசுக்கு மாற்றப்படும் நிலை இருக்கிறது.
புதுவை மாநிலத்தில் சுத்தமான குடிநீர் வழங்க கோரி குடத்துடன் பெண்கள் ஊர்வலம், மதிய உணவு தயாரிப்பு ஊழியர்கள், கல்வித்துறையில் காத்திருப்பு போராட்டம், ரொட்டி பால் ஊழியர்கள் போராட்டம், தரமற்ற இலவச அரிசி விநியோகம் ஆகியவற்றை பார்க்கின்றபோது மத்திய அரசு திட்டமிட்டு என்.ஆர். காங்கிரசை பலவீனப்படுத்த செய்கின்ற சதி செயல் என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஏ.வி.சுப்ரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.