உள்ளூர் செய்திகள்
அமைச்சர் தா.மோ. அன்பரசன் சான்றிதழ் வழங்கினார்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 93 கூட்டுறவு நிறுவனங்களில் 18 ஆயிரத்து 443 பயனாளிகளின் நகைக்கடன் தள்ளுபடி- அமைச்சர் தா.மோ. அன்பரசன் சான்றிதழ் வழங்கினார்

Published On 2022-03-23 13:04 IST   |   Update On 2022-03-23 13:04:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கி, 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 2 நகர கூட்டுறவு வங்கிகள், 3 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், 29 பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் ஒரு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம் என பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக விவசாயிகளுக்கு தேவையான பயிர் கடன்கள், விதை, உரங்கள், இடுபொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும் குறுகிய கால மற்றும் மத்திய கால வேளாண் கடன்கள் வழங்கப்படுகிறது.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் ஒரு குடும்பத்திற்கு 40 கிராமுக்கு உட்பட்ட நகைக் கடன்களை தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 93 கூட்டுறவு நிறுவனங்களில், நகைக் கடன் வழங்கி வரும் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகைக்கடன் கள ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40 கிராமிற்குட்பட்டு அடமானம் வைக்கப்பட்ட பொது நகைக்கடன்கள் 18 ஆயிரத்து 443 பயனாளிகளின் அசல் ரூ.58.08 கோடி மற்றும் வட்டி ரூ.5.62 கோடி தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டது.

இதைத் தொடர்ந்து நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அப்போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் பேசியதாவது:-

“கூட்டுறவு சங்கங்கள் மூலம் சுய உதவிக்குழுக் களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 31.3.2021-ல் நிலுவை நிற்கும் ரூ.2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சுயஉதவிக்குழுக்களுக்கு கடன்கள் கள ஆய்வு செய்யப்பட்டு, தகுதியானவர்களுக்கு விரைவில் தள்ளுபடி வழங்கிட ஆவன செய்யப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகள் பயனடையும் வகையில், கடனை உரிய காலத்திற்குள் திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடனாக பயிர் கடன் வழங்கப்பட்டு வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பு ஆண்டுக்கு ரூ.70 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு தற்போது வரை 11,149 விவசாயிகளுக்கு ரூ.67.20 கோடி அளவிற்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பண்ணை சாரா கடன்கள், வீட்டு அடமானக் கடன், தொழில் முனைவோர் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், தாட்கோ கடன், டாப்செட்கோ கடன், டாம்கோ கடன் போன்ற பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டும், மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதற்காக கூட்டுறவு கணினி மயமாக்கப்பட்டு, விரைந்த சேவையினை அளித்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் எம்.எல். ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம். பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார், துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட கூட்டுறவு துறை இணைப் பதிவாளர் லட்சுமி முருகன், நகர தி.மு.க. செயலாளர் சன்பிரண்ட் கே. ஆறுமுகம் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Similar News