உள்ளூர் செய்திகள்
இலவச அரிசியில் புழு-பூச்சி இருப்பதை காணலாம்.

இலவச அரிசியில் புழு-பூச்சி- வையாபுரிமணிகண்டன் கண்டனம்

Published On 2022-03-22 14:26 IST   |   Update On 2022-03-22 14:26:00 IST
பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் இலவச அரிசியில் புழு, பூச்சி இருப்பதாக வையாபுரிமணிகண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் கொரோனா பரவல் காரணமாக ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் சிகப்பு ரேஷன்கார்டு தாரர்களுக்கு உதவிடும் வகையில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் அரிசி, தானியங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. 

இந்த அரிசி குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் மூலம் புதுவையில் பள்ளிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. காலத்தோடு இந்த அரிசியை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரிசியில் வண்டு, புழு, பூச்சிகள் உருவாகிவிட்டன. 

புதுவை முத்தியால்பேட்டையில் பொதுமக்களுக்கு வண்டு, புழு, பூச்சிகளோடு அரிசி விநியோகம் செய்யப் பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அரிசியில் வண்டு, புழு, பூச்சிகளை கண்டு பொதுமக்கள் மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர்.  இந்த அரிசியை பொதுமக்கள் பயன்படுத்தினால் பல்வேறு உடல் உபாதைகளுக்கும், நோய் தாக்குதலுக்கும்தான் ஆளாக வேண்டியிருக்கும். 

மக்களின் பயன்பாட்டுக்கு வழங்கப்படும் அரிசி தரமானதாக இருக்க வேண்டும். புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அதிகாரிகள் காலதாமதமின்றி வண்டு, புழு, பூச்சிகளோடு உள்ள அரிசியை உடனடியாக மாற்றித்தர வேண்டும். இருப்பு வைத்துள்ள அரிசி களையும் பரிசோதனை செய்து தரமான அரிசியை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். 
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News