உள்ளூர் செய்திகள்
தனியார் நிதி நிறுவன ஊழியரை கட்டையால் தாக்கிய வாலிபர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தனியார் நிதி நிறுவன ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அருகே மிண்டிகிரி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்கேயன் (வயது30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் வாலிப்பட்டி பகுதியை சேர்ந்த அருணாசலம் என்பவர் அந்த நிறுவனத்தில் மூலம் தவணை முறையில் புது மோட்டார் சைக்கிள் வாங்கியுள்ளார்.
கடந்த சில மாதங்களாக அருணாசலம் வாங்கிய அந்த வாகனத்திற்கு சரிவர பணம் கட்டவில்லை. இதனால் அந்த நிறுவனத்தை சேர்ந்த கார்த்திக்கேயன் கடந்த 18&ந்தேதி அன்று அருணாசலம் வீட்டிற்கு வந்தார். அங்கு அவர் இல்லாததால் உறவினர் மணிகண்டனிடம் வண்டிக்கு பணம் கட்டவில்லை என கூறியதாக தெரிகிறது.
இதனால் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் உருட்டு கட்டையால் சரமாரியாக கார்த்திக்கேயனை தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த கார்த்திக்கேயனை அக்கம் பக்கத் தினர் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.