உள்ளூர் செய்திகள்
வீரபத்திர சுவாமி கோவில் தேர் திருவிழா
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே வீரபத்திர சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகே தேவே கவுண்டன் தொட்டி கிராமத்தில் உள்ள சிவலிங்கேஸ்வர சுவாமி, வீரபத்திர சுவாமி, சனீஸ்வர சுவாமி கோவில் தேர்த் திருவிழா நடைபெற்றது. 3 நாட்கள் நடைபெற்ற விழாவில் சுவாமிகளுக்கு ஒசப்புரம் மடாதிபதி கரி பசவ ராஜேந்திர சுவாமிகள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தேர் திருவிழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் புனிதநீர் தெளித்து உற்சவ மூர்த்திகளை அமர்த்தி பூஜைகள் செய்யப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க, மேளதாளங்கள் முழங்க, பக்தர்கள் ஹர ஹர மகாதேவ் என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வீரகாசே என்ற வீரநடன குழுவினரின் கலை நிகழ்ச்சிகளுடன் கோவிலை சுற்றி வந்து மாலையில் தேரை நிலை நிறுத்தினர்.
விழாவில் பக்தர்களுக்கு நீர்மோர், பானகம், அன்ன தானம் வழங்கப்பட்டது. திருவிழாவில் தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, உரிகம், சுற்றுப்புற பகுதிகள் மற்றும் கர்நாடக மாநில பக்தர்களும் திரளாக கலந்து கொண் டனர்.