உள்ளூர் செய்திகள்
ஓசூர் பஸ் நிலையத்தில் தவித்த மூதாட்டி சரசு மற்றும் அவரது மகள் சாந்தி.

வீட்டில் வைத்து பராமரிக்க முடியாததால் ஓசூர் பஸ் நிலையத்தில் வயதான மூதாட்டி-மகளை விட்டு சென்ற அவலம்

Published On 2022-03-20 15:01 IST   |   Update On 2022-03-20 15:01:00 IST
வீட்டில் வைத்து பராமரிக்க முடியாததால் ஓசூர் பஸ் நிலையத்தில் வயதான மூதாட்டி& மகளை விட்டு சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
 ஓசூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையத்தில் நேற்றுமுன்தினம் இரவு யாரும் ஆதரவற்ற நிலையில் 2 மூதாட்டிகள் இருந்தனர். நீண்ட நேரமாக பஸ் நிலையத்தில் இருவரும் உட்கார்ந்து இருந்ததால் அங்கு நின்றவர்கள் பார்த்தனர். 

அப்போது அங்கு இருந்த ஒரு கடைக்காரர் , 2 மூதாட்டிகளையும் மாநகராட்சி ஆதரவற்ற இரவு தங்கும் விடுதிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தார். இதையடுத்து முதியோர்கள் இருவரும் ஆதரவற்ற விடுதியில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை செய்ததில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பகுதியை சேர்ந்த சரசு (வயது 86), அவரது மகள் சாந்தி (65) என்பதும் தெரிய வந்தது. 

இந்த நிலையில் சாந்தி மற்றும் அவரது தாய் சரசு ஆகியோருக்கு மிகவும் வயதாகி விட்டதால், அவர்களை வீட்டில் வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது குடும்பத்தினர், இருவரையும் ஓசூர் பஸ் நிலையத்தில் விட்டு சென்றது தெரிய வந்தது. வயதான தாயும், அவரது மகளும் எங்கு செல்வது? என தெரியாமல் சாப்பாட்டுக்கு வழியில்லாமலும் நீண்டநேரமாக பஸ் நிலையத்தில் அமர்ந்திருந்ச சம்பவம் அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வயது மூப்பு என்பது எல்லோருக்கும் வாழ்க்கையில் வரும். அதேநேரத்தில் இதுபோன்ற காலங்களில் வயதானவர்களை வீட்டில் வைத்து நல்ல முறையில் பராமரிக்க வேண்டும்.  இதுபோல் மனசாட்சி இல்லாமல் வயதானவர்களை எங்காவது ஒரு இடத்தில் விட்டுவிட்டு செல்லக்கூடாது. மேலும் பஸ் நிலையத்தில் சுற்றி திரியும் மனநலம் பாதித்தவர்கள், வயதானவர்களை பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News