உள்ளூர் செய்திகள்
களியன் வாத்துக்களை படத்தில் காணலாம்

காஞ்சிபுரம் அருகே பரந்தூர் ஏரியில் 2,100 களியன் வாத்துக்கள் குவிந்தன- புதிய சரணாலயமாக மாறியது

Published On 2022-03-20 13:11 IST   |   Update On 2022-03-20 13:11:00 IST
காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது.

காஞ்சிபுரம்:

தமிழகத்தில் பிப்ரவரி 12 மற்றும் 13-ந்தேதிகளில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.

இது 15 மாவட்டங்களில் உள்ள 311 நீர்நீலைகளில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.

காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் ஏரியில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிக அளவில் களியன் வாத்துக்கள் குவிந்து இருப்பது தெரிந்தது.

வனத்துறையினரின் ஏற்பாட்டில் தனியார் அமைப்பினர் தினந்தோறும் மேற்கொண்ட துல்லிய ஆய்வில் 12 தனித்தனி கூட்டங்களாக 2,100 களியன் வாத்துக்கள் பரந்தூர் ஏரியில் முகாமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பரந்தூர் ஏரி புதிய சரணாலயமாக மாறி உள்ளது.

இது குறித்து தனியார் அமைப்பினர் கூறியதாவது:-

பரந்தூர் ஏரியில் 2100 களியன் வாத்துக்கள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இவை அனைத்தையும் புகைப்படங்களாக ஆதாரப்படுத்தி உள்ளோம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகபட்சமாக 20 அல்லது 30 எண்ணிக்கையிலேயே களியன் வாத்துக்கள் இருந்தன. ஆனால் இவை பரந்தூர் ஏரியில் 2,100 எண்ணிக்கையில் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. நன்னீர் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என்று தெரிகிறது.

எனவே இது போன்ற நீர்நிலைகளில் மாசுக்கள் கலப்பதையும், பறவைகள் வேட்டையாடப்படுவதையும் தடுத்தால் வாத்துக்கள் போன்ற பறவைகளை பாதுகாக்கலாம். இதற்கு வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2015-ம் ஆண்டு இந்த வகை பறவைகள் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை பறவையாக சர்வதேச அளவில் பட்டியலிடப்பட்டன. களியன் வாத்துக்களுக்கு தலை, கழுத்து பகுதிகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். சிமெண்டு நிறத்தில் அலகு இருக்கும். மேற்கு ஐரோப்பாவில் இருந்து இனப்பெருக்கத்துக்காக இவை மத்திய ஆசியாவில் சைபீரிய பகுதிக்கு செல்லும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News