உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2022-03-20 10:06 IST   |   Update On 2022-03-20 10:06:00 IST
அதிக வட்டிக்கு பணம் வாங்கியதால் கடன் தொல்லையால் எலக்ட்ரீசியன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

பாகூரை அடுத்த சேலிய மேடு, ரெட்டியார் தெருவை சேர்ந்தவர் தங்கராஜா (வயது 36). இவருக்கு இளவரசி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனர். தங்க ராஜா எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவரது மனைவி  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கணவன்-மனைவி இருவரும் கடந்த ஆண்டு தீபாவளி சீட்டு நடத்தினர். இதில் பலர் பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.  

இதையடுத்து தீபாவளி சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை உடனடியாக கொடுக்க வேண்டும் என்ப தற்காக அதிக வட்டிக்கு தங்க ராஜா பணம் வாங்கினார். ஆனால் அந்த பணத்தை திருப்ப செலுத்த முடியாமல் தங்கராஜா திண்டாடி வந்தார். 

இதனால் மன வேதனையில் இருந்து தங்கராஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது மனைவி இளவரசி வேலைக்கு செல்ல தயாரான போது திடீரென தங்கராஜா  படுக்கை அறைக்குள் சென்று திடீரென உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த இளவரசி அக்கம் பக்கத்தினர்  உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கணவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவரை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே தங்கராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், ஏட்டு ராதா கிருஷ்ணன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News