உள்ளூர் செய்திகள்
ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கட்டுமானப்பணி ஆய்வு
சீர்காழி அருகே ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் கட்டுமானப் பணியை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமானப் பணியை ஆய்வு செய்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் மதிவாணன் நிருபர்களிடம் கூறுகையில்,
கொண்டல், மாதானம், அகர பெருந்தோட்டம், தென்னாம் பட்டினம் ஆகிய ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் புதிய கட்டிடம் கட்டுமான பணிகள் ரூ.2 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
நடந்து வரும் பணிகளை விரைவு படுத்தவும், பணிகளின் தரம் குறித்த ஆய்வு செய்தேன்.மேலும் அரசுப் பள்ளிகளில் அதிக மாணவர்களை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்தேன்.
பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கவும், கொண்டல் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், கோட்டாட்சியர் நாராயணன், தாசில்தார் சண்முகம், தாட்கோ செயற்பொறியாளர் உதய ராமன், உதவி செயற்பொறியாளர் அமிர்தலிங்கம், திமுக ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், சசிகுமார், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.