உள்ளூர் செய்திகள்
சமுதாய கல்லூரியை பாகூரில் நிறுவ வேண்டும்
சமுதாய கல்லூரியை பாகூரில் நிறுவ வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அட்டவணை இன மக்களின் வளர்ச்சிக்காக சிறப்புக்கூறு நிதி ஒதுக்கப்படுகிறது. மாநில அரசு பட்ஜெட்டில் 16 சதவீத நிதியை ஒதுக்கி அவர்களின் வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும். அட்டவணை இன மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற சிறப்பு திட்டங்களை உருவாக்கி, செயல் படுத்தாதது இத்திட்டத்தின் குறைபாடாக உள்ளது. இத்திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்த சிறப்புக்கூறு திட்ட செயல்பாடு துறை என்ற துறையை அரசு உருவாக்க வேண்டும்.
மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வகுக்க வேண்டும். திட்டம் சார்ந்த மூலதன நிதியை புதிய துறையும், திட்டம் சாராத வருவாய் நிதியை ஆதிதிராவிடர் நலத்துறையும் செலவு செய்ய வேண்டும். வேறு எந்த துறைக்கும் நிதியை மாற்றம் செய்யக்கூடாது. மக்கள்தொகைக்கு ஏற்ப காரைக்காலுக்கு 17.7, புதுவைக்கு 16, ஏனாமிற்கு 15.2, மாகிக்கு 0.3 சதவீத நிதி ஒதுக்க வேண்டும்.
மாநில, மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். இந்த குழு பணிகளை கண்காணித்து ஆண்டறிக்கை தயாரித்து பட்ஜெட்டின் போது சமர்பிக்க வேண்டும். நிலமற்ற கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் அரை ஏக்கர் நிலமாவது வழங்க வேண்டும். சமுதாய கல்லூரியை பாகூர் அல்லது திருபுவனையில் நிறுவ வேண்டும். மருத்துவம், சத்துணவு, குடிநீர் உட்பட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்.
சிறப்பு கவனத்தோடு இத்திட்டத்தையும், நிதியையும் பயன்படுத்தினால் அட்டவணை இன மக்களின் வாழ்க்கையில் வியத்தகு மாற்றத்தை அரசு காணலாம். ஆந்திராவில் உள்ளதுபோல பிரத்யேக சிறப்புக்கூறு நிதி சட்டத்தையும் புதுவை அரசு உருவாக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.