உள்ளூர் செய்திகள்
முதலை

கொளப்பாக்கம் ஏரியில் இருந்து தாம்பரம் அருகே குடியிருப்புக்குள் புகுந்த முதலை

Published On 2022-03-16 12:21 IST   |   Update On 2022-03-16 12:21:00 IST
வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம்பரம்:

தாம்பரம் அருகே உள்ள கொளப்பாக்கம் ஏரியை ஒட்டி வரபிரசாத் நகர் உள்ளது. இது வண்டலூர் பூங்காவின் பின்புறம் அமைந்துள்ளது.

இந்த நிலையில் வர பிரசாத் நகருக்குள் நேற்று இரவு சுமார் 4 அடி நீளம் உள்ள முதலை ஒன்று ‘ஹாயாக’ சுற்றி வந்தது. இதனைக்கண்டு நாய்கள் குரைத்தன. அப்பகுதி மக்கள் வந்து பார்த்தபோது சாலையில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று வண்டலூர் பூங்கா நிர்வாகத்தினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வனத்துறை அதிகாரிகள், பூங்கா ஊழியர்கள் விரைந்து வந்து குடியிருப்புக்குள் புகுந்த முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை பாதுகாப்புடன் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

மேலும் வரபிரசாத் நகர் பகுதிக்குள் வேறு முதலை புகுந்துள்ளதா என்று சோதனையிட்டனர். ஆனால் எதுவும் சிக்கவில்லை.

குடியிருப்புக்குள் முதலைகள் வந்தால் உடனடியாக வண்டலூர் பூங்கா நிர்வாகத்துக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் முதலை புகுந்ததால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதற்கு முன்பும் சதானந்தபுரம், நெடுங்குன்றம் பகுதிகளுக்குள் முதலை புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வண்டலூர் பூங்காவில் பராமரிக்கப்படும் முதலைகள் சிறிதாக இருக்கும்போது உணவுக்காக பறவைகள் தூக்கி செல்கின்றன. அவை தவறி பூங்காவை தாண்டியுள்ள காட்டு பகுதிகளுக்குள்ளும், நீர்நிலைகளிலும் விழுந்து வளர்ந்து வருகிறது.

இப்படி வளர்ந்த முதலைகள் சதானந்தபுரம், நெடுங்குன்றம், கொளப்பாக்கம் ஏரி பகுதிகளில் இருப்பதாக பொதுமக்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

பொதுமக்களின் தொடர் குற்றச்சாட்டுக்கு பின்னர் வண்டலூர் பூங்காவில் முதலைகள் இருக்கும் நீர் நிலைகளின் மேல் பகுதியில் பறவைகள் புகாத வண்ணம் வலைகள் அமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் பூங்காவிற்கு வெளியே தண்ணீருக்குள் இருக்கும் முதலைகளை பிடிப்பதில் சிரமம் என்பதால் அதனை தேடும் முயற்சி நடைபெறவில்லை. நீர்நிலைகளில் உள்ள முதலைகள் வெளியே வரும்போது அதனை வனத்துறையினர் பிடித்துச் செல்கின்றனர்.

எனவே வண்டலூர் பூங்காவின் பின்புறம் உள்ள பகுதிகள் மற்றும் நீர்நிலைகள் முழுவதும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தி முதலைகளை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News