உள்ளூர் செய்திகள்
ஆக்கூர் ஹரிஹரசுதன் கோவில் கும்பாபிஷேகம்

ஹரிஹரசுதன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-03-15 07:32 GMT   |   Update On 2022-03-15 07:32 GMT
செம்பனார்கோவில் அருகே ஹரிஹரசுதன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தரங்கம்பாடி:

செம்பனார்கோயில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சி உடையார் கோயில்பத்து கிராமத்தில் பிரசித்தி பெற்ற பூர்ணா புஷ்களாம்பிகா உடனாகிய ஹரிஹரசுதன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. முன்னதாக கடந்த 12-ம் தேதி முதல்யாகசாலை பூஜை தொடங்கப்பட்டது. இதனையடுத்து 2-ம் மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. நேற்று 4-ம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.

வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலை வலம் வந்து கோபுரத்தை அடைந்தனர். அங்கு வேத மந்திரங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் ஹரிஹரசுதன் சாமி மற்றும் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

 இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரமோகன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர். இதில் பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ. நிவேதா முருகன், தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் ராஜ்கண்ணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News