உள்ளூர் செய்திகள்
புதுவை அரசு பள்ளி மழலையர் வகுப்பில் மகனை சேர்ந்த கல்வித்துறை இயக்குனர்
புதுவை அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷை லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமிநாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று சேர்த்தார்.
புதுச்சேரி:
கொரோனா பரவல் குறைந்ததையொட்டி பள்ளி, கல்லூரிகளை தொடர்ந்து அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகளும் இன்று தொடங்கியது.
அரசு பள்ளி மழலையர் வகுப்பில் ஆர்வத்தோடு பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர். புதுவை அரசின் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு தனது மகன் அசுகோஷை லாஸ்பேட்டை கோலக்கார அரங்கசாமிநாயக்கர் அரசு நடுநிலைப்பள்ளியில் இன்று சேர்த்தார்.
அவரே பள்ளிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பள்ளி முதல்வரிடம் அளித்து தனது மகனை மழலையர் வகுப்பில் சேர்த்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கின்றனர் என குற்றச்சாட்டு நிலவுகிறது.
அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியிலேயே சேர்க்க உத்தரவிட வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் முன்னுதாரணமாக தனது மகனை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து இயக்குனர் ருத்ரகவுடுவிடம் கேட்டபோது, அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் உள்ளது. மழலையர் வகுப்பில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் அடிப்படை கல்வி சிறப்பாக இருக்கும் என தெரிவித்தார்.