உள்ளூர் செய்திகள்
தீமிதி திருவிழாவில் பக்தர் ஒருவர் அலகு குத்திக்கொண்டு தீக்குண்டத்தில் இறங்கினார்.

மகா முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

Published On 2022-03-14 09:33 GMT   |   Update On 2022-03-14 09:33 GMT
திருக்கடையூர் மகா முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், திருக்கடையூர் ஊராட்சி கீழ வீதியில் மகா முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோயிலில் தீமிதி திருவிழா கடந்த 4 &ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மகாமுத்துமாரி அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

நேற்று தீமிதி திருவிழாவை முன்னிட்டு மாலை திருக்கடையூர் ஆணைக்குளத்தில் உள்ள எதிர்காலிஈஸ்வரர் கோவிலில் இருந்து பால் காவடி, அலகு காவடி, பறவைக் காவடிகள் உடன் கரகம் புறப்பட்டு வாணவேடிக்கை மேளதாளம் முழங்க கடைவீதி, சன்னதி வீதி, வடக்கு வீதி, மேல வீதி வழியாக கோயிலை வந்தடைந்தது. 

அதனை தொடர்ந்து மகா முத்து மாரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. கோவில் முன்பு தீமிதி உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்தனர்.

தொடர்ந்து இரவு அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அமிர்தம் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா ரமேஷ், ஒன்றிய குழு துணைத் தலைவர் மைனர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலாசிவராஜ், மற்றும் கிராமவாசிகள் பக்தர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News