உள்ளூர் செய்திகள்
வனப்பகுதிகளில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது- மாவட்ட வன அலுவலர் எச்சரிக்கை
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் தீ வைத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார் என மாவட்ட வன அலுவலர் எச்சரித்துள்ளார்.
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை, மாதகடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் அடர்ந்த வனப்பகுதி உள்ளது.
இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரும் ஒருசில சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் தூக்கி போடுவதால் மூலிகை செடிகள், வன உயிரினங்கள் தீயில் கருகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட அலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா நிருபர்களிடம் கூறியதாவது:-
திருப்பத்தூர் வன மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஹெக்டர் பரப்பளவில் வனப்பகுதிகள் உள்ளன.
இங்கு ஏராளமான வன விலங்குகளும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும், மருத்துவ குணம் கொண்ட செடி, கொடிகள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கோடை காலம் நெருங்குவதால் இலைகள் காய்ந்து சருகாகிறது.
இதனால் விஷமிகள் காய்ந்த கருகிற்கு தீ வைக்கின்றனர். கடந்த சில நாட்களாக ஏலகிரிமலை, நெக்கனாமலையில் தீ வைப்பு சம்பவம் அதிகமாக நடந்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் மட்டுமின்றி வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி, மூலக்கொல்லை, சைதாப்பேட்டை, வேலப்பாடி, ஓல்டுடவுன் போன்ற பகுதிகளை சுற்றியுள்ள மலைப்பகுதிலும் தீ வைப்பு சம்பவம் அதிகமாக நிகழ்ந்து வருகிறது.
திருப்பத்தூர் வன மாவட்டத்தில் உள்ள ஏலகிரிமலை, ஜவ்வாதுமலை, மாதகடப்பா, நெக்னாமலை, காவனூர், பனங்காட்டேரி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தீ வைப்பதால் அந்த பகுதி முழுவதும் தீயினால் சேதமடைந்துள்ளது.
தீ வைப்பு சம்பவத்தில் ஈடுடுபடுபவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்படுவார்கள்.
எனவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட வனப்பகுதிகளில் அனுமதியின்றி உள்ளே நுழைந்து வனப்பகுதிக்கு தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டு சட்டம் பதிவு செய்து அவர்கள் கைது செய்ய வனத்துறை நடவடிக்கை எடுக்கும்.
வனப்பகுதிகளுக்குள் அத்துமீறி யாராவது நுழைந்து தீ வைப்பவர்களை பொதுமக்கள் கண்டால் உடனடியாக திருப்பத்தூர் வனசரக அலுவலகம் 99943 94417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றார்.