உள்ளூர் செய்திகள்
கைது

ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்பு- தம்பதி கைது

Published On 2022-03-12 15:36 IST   |   Update On 2022-03-12 15:36:00 IST
காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை சில மணி நேரத்தில் மீட்கப்பட்டது.
காஞ்சிபுரம்:

ராணிப்பேட்டை மாவட்டம் மேல் பவழந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(வயது 29). இவரது மனைவி சுஜாதா(25). இவர்களுக்கு கடந்த 8-ந் தேதி காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இந்தநிலையில் நேற்று தாய் சுஜாதாவை அவரது மாமியார் கழிவறைக்கு அழைத்து சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சிபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.

இதற்கிடையில் குழந்தையின் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே ஆட்டோ டிரைவரிடம் விசாரித்த போது, இப்போதுதான் குழந்தையுடன் ஒரு தம்பதியை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

உடனடியாக அதே ஆட்டோவில் போலீசாரின் உதவியுடன் காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு சென்ற உறவினர்கள் அந்த தம்பதியை தீவிரமாக தேடினர். அப்போது அங்கு மறைவாக குழந்தையுடன் நின்று கொண்டிருந்த தம்பதியை பிடித்து அவர்களிடமிருந்த பச்சிளம் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குழந்தையை கடத்திய தம்பதியை கைது செய்தனர். குழந்தையை கடத்தியவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பிச்சிவாக்கம், செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராமன் (30) அவரது மனைவி சத்யபிரியா (23) என்பதும் திருமணமாகி 5 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், குழந்தையை கடத்தியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Similar News