உள்ளூர் செய்திகள்
சட்டநாதபுரம் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் சிமெண்ட் சாலை மற்றும் சிகிச்சை பெற்று வரும் ஊராட்சி மன்ற தலைவர்.

ஊராட்சி மன்ற தலைவர் மீது தாக்குதல்

Published On 2022-03-11 13:55 IST   |   Update On 2022-03-11 13:55:00 IST
சட்டநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவரை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:

சீர்காழி அடுத்த சட்டநாதபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி (வயது 60). ஊராட்சி மன்ற தலைவர். இவர் சட்டநாதபுரம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டார். 

அப்போது கலியபெருமாள் என்பவருக்கு உரிய பிளாட் வழியாக சாலை அமைக்கும்போது பிளாட் சேதப்படுத்தப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து சட்டநாதபுரம் பகுதியை சேர்ந்த தி.மு.க ஒன்றியக்குழு உறுப்பினர் விசாகர் (42) கேட்டுளார். 

இதனால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது.  நேற்று முன்தினம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் முடிந்து ஒன்றிய குழு உறுப்பினர் விசாகர் வெளியே வந்தபோது ஊராட்சி மன்றத்தலைவர் தட்சிணாமூர்த்தி அவரிடம் வாக்குவாதம் செய்தார். தி.மு.க மற்றும் அ.தி.மு.க. வை சேர்ந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதனிடையே நேற்று மீண்டும் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதில் ஊராட்சிமன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி தாக்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தெட்சிணாமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் மீது புகார் அளித்தார். புகாரினை அடுத்து சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார், விசாகர் மீது வழக்கு பதிவு செய்தனர். 

இதனிடையே பிளாட்டினை சேதப்படுத்தி சாலை அமைக்கப்பட்டுள்ளதாக ஊராட்சி தலைவர் தெட்சிணாமூர்த்தி மீது ஒன்றிய கவுன்சிலர் விசாகரும் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருதரப்பு புகாரினை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News