உள்ளூர் செய்திகள்
ரேசன் அரிசியை பளபளப்பாக்க நவீனமாகும் ஆலைகள்
ரேசன் அரிசியை பளபளப்பாக்க ஆலைகள் நவீனமாக்கப்பட்டு வருகிறது.
போளூர்:
தமிழகத்தில் உள்ள ரேசன் கடைகளில், ஒரு கோடிக்கும் அதிகமான ரேசன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இதை ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ரேசனில் வழங்கப்படும் அரிசி பெரும்பாலும் தரமாக இருப்பதில்லை. கல், குருணை, பழுப்பு நிறம் நீக்காமல் தரமற்ற வகையில் வழங்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பிரச்னைக்கு முடி வுகட்டும் வகையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்துக்கு சொந்தமான நவீன அரிசி ஆலைகளில், நவீன எந்திரங்களை பொருத்தி, கல், குருணை மற்றும் பழுப்பு நிறத்தை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 23 நவீன அரிசி ஆலைகளில் ஏற்கனவே 6 ஆலைகளில் தலா 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நவீன எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இப்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, போளூர் உட்பட 12 நவீன அரிசி ஆலைகளில் புதிய எந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
போளூர் அடுத்த சனிக்கவாடி அருகே உள்ள அரசு நவீன அரிசி ஆலையில் புதிய எந்திரம் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இதை மாவட்ட வினியோக அதிகாரி கிருஷ்ணமூர்த்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, தாசில்தார் சண்முகம், அரிசி ஆலை பொறியாளர் சுந்தரமகாலிங்கம் மற்றும் ஊழியர்கள் உடன் இருந்தனர்.