உள்ளூர் செய்திகள்
வார விடுமுறையில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊட்டி:
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட் டுள்ள சூழலிலும், விடுமுறை நாட்கள் என்பதாலும், சமவெளிப் பகுதிகளில் அதிகரிக்கும் வெப்பத்தாலும் தமிழகம் மற்றும் கேரள, கர்நாடக மாநிலங்களிலிருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற நாள்களைவிட வார விடுமுறை நாள்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது
ஊட்டியில் வார விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வாரத்தில் ஊட்டிக்கு சுமார் 40,000 பேரும், ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு மட்டும் 31,000 பேரும் வருகை தந்துள்ளனர்.
ஊட்டி அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 8,000 சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், நேற்று இது 13,000 ஆக அதிகரித்திருந்தது. அதேபோல, ஊட்டி அரசினர் ரோஜா பூங்காவுக்கு சனிக்கிழமை சுமார் 3,000 பேரும், நேற்று 3,500 பேரும் வருகை தந்திருந்தனர். குன்னூர் சிம்ஸ் பூங்காவுக்கு சனிக்கிழமை 1,500 பேர் வந்திருந்த நிலையில் நேற்று இது 2,000 ஆக அதிகரித்திருந்தது.
அதேபோல, ஊட்டி படகு இல்லத்துக்கு சனிக்கிழமை சுமார் 5,000 பேரும், நேற்று 8,000 பேரும் வந்திருந்தனர். பைக்காரா படகு இல்லத்துக்கு சனிக்கிழமை 2,500 பேர் வந்திருந்த நிலையில் நேற்று 4,000 ஆக அதிகரித் திருந்தது.
இவற்றைத்தவிர பைக்காரா அருவி, அவலாஞ்சி, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்திருந்தது. சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.