உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வேளாண் கல்லூரி மாணவர்கள் சார்பில் களப்பயிற்சி

Published On 2022-03-07 07:56 GMT   |   Update On 2022-03-07 07:56 GMT
காட்டூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவரது விவசாய பண்ணையில் செயல் விளக்கம் நடந்தது.
உடுமலை:

திருப்பூர் பொங்கலூரை அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் அங்கக முறையில் விதை நேர்த்தி மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. 

காட்டூரை சேர்ந்த விவசாயி கந்தசாமி என்பவரது விவசாய பண்ணையில் செயல் விளக்கம் நடந்தது. இதில் விவசாயிகள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரைசோபியம் மற்றும் டிரைகோடெர்மா விரிடி பயன்படுத்தி பச்சைப்பயறில் விதை நேர்த்தி செய்து காண்பித்ததுடன், விதை நேர்த்தியின் முக்கியத்துவம் மற்றும் பயன்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

மேலும் வேளாண் கழிவுகளை வீணாக்காமல் முறையாக பயன்படுத்துவது குறித்தும், அதனைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. நிறைவாக விவசாயிகள் தங்கள் சந்தேகங்களுக்கான விளக்கத்தை கேட்டறிந்தனர்.

உடுமலை வட்டத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவிகள் 10 பேர் அஜிதா, சாரு ஸ்ம்ரித்தீ, தக்ஷண்யா, ஹரி பிரியா, பீயுசா, ஷோபிகா, சுப்பிரியா, சுவேத பிரியா, விசாலி கவி பிரியா, மிருது பாஷினி ஆகியோர்கள் “ கிராம‌ தங்கல்” திட்டத்தின் கீழ் தங்கி குறிப்பிட்ட கிராமங்களில் விவசாயிகளிடம் கள பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்கீழ் மானுபட்டி கிராமத்தில் ஊர்மக்கள் மற்றும் விவசாயிகளின் உதவியோடும் “கிராமப்புற பங்கேற்பு மதிப்பீடு” நடத்தினர். மானுபட்டி கிராமத்தின் சமூக வரைபடம், கிராம வள வரைபடம், பருவங்களையும் அப்பருவங்களில் பயிரிடப்படும் பயிர்களையும் விளக்கும் வரைபடம், கிராம மக்களின் தினசரி வேலை கடிகாரம், கிராம வசதிகளை விளக்கும் வெண்படம், வேளாண்மை செய்வதில் உள்ள பிரச்சினைகளை விளக்கும் பிரச்சினை வேர் ஆகியவற்றை வரைந்தனர்.

அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் ‘தென்னை டானிக்கை’ வேர் மூலமாக பயன்படுத்தும் முறை குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் செயல்விளக்கம் அளித்தனர். விவசாயிகளும் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.
Tags:    

Similar News