உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

அவிநாசியில் சிப்காட் அமைத்தால் போராட்டம் - கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

Published On 2022-03-07 13:03 IST   |   Update On 2022-03-07 13:03:00 IST
அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தால் அவிநாசி ஒன்றிய பகுதிகள் நீராதாரம் பெறப்போகிறது.
திருப்பூர்:

தமிழகத்தில் 26 இடங்களில், ‘சிப்காட்’ தொழில்பேட்டை அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அவிநாசி ஒன்றியத்தில், தத்தனூர், புலிப்பார், புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சிகளில், 800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. விவசாயிகள் எதிர்ப்பால் இத்திட்டம் செயல்படுத்தப்படாது என அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில், அப்பகுதியில் ‘சிப்காட்’ அமைப்பதற்காக, நிலம் அளவீடு செய்ய குழுவினர் வந்ததால் விவசாயிகள் மீண்டும் அச்சமடைந்துள்ளனர். 

இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:

அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தால் அவிநாசி ஒன்றிய பகுதிகள் நீராதாரம் பெறப்போகிறது. இந்த நேரத்தில் 1,000 ஏக்கர் நிலத்தில் தொழிற்பேட்டை அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். விவசாயிகளின் எதிர்காலம் பாழாகிவிடும்.

 தி.மு.க., அரசு அவிநாசியில் ‘சிப்காட்’ தொழிற்சாலை அமைவதை தடுக்க வேண்டும். தொழிற்பேட்டைகள், பின்தங்கிய மாவட்டங்களில் அமைத்து மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கலாம். 

மாறாக விவசாயத்தை அழித்து தொழில் நகரின் அருகே உள்ள பகுதியில் தொழிற்பேட்டை தேவையில்லாதது. அவிநாசி ஒன்றியத்தில் ‘சிப்காட்’ தொழிற்பேட்டை அமைக்க முயற்சித்தால் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் களத்தில் இறங்கி போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News