உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

திருமூர்த்தி அணையில் பல ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் படகு சவாரி- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2022-03-06 06:29 GMT   |   Update On 2022-03-06 06:29 GMT
படகுகளை இயக்க புதிதாக பொறுப்பேற்றுள்ள பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை:

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தலமாக உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து செல்கின்றனர். 

சுற்றுலா பயணிகளுக்காக 20 ஆண்டுகளுக்கு முன்பு, திருமூர்த்தி அணையில் தளி பேரூராட்சி சார்பில் படகுத்துறை அமைக்கப்பட்டது. 2 என்ஜின் படகுகள் மற்றும் ஒரு பெடலிங் படகு இயக்கப்பட்டது. 

தினமும் 200-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், விடுமுறை நாட்கள் மற்றும் சீசன் காலங்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி வந்தனர்.

மகளிர் சுய உதவிக்குழு வாயிலாக இயக்கப்பட்ட நிலையில் கட்டண வருவாயில் 75 சதவீதம் மகளிர் சுய உதவி குழுவினருக்கும், 25 சதவீதம்  தளி பேரூராட்சி நிர்வாகத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

இதில் ஏற்பட்ட குளறுபடி மற்றும் அடிக்கடி படகு என்ஜின் பழுது, பேரூராட்சிக்கு வருமானத்தை விட செலவு அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல ஆண்டுகளாக படகு சவாரி முடங்கியுள்ளது.

படகுத்துறை பாழடைந்தும் படகுகள் அனைத்தும், பராமரிப்பு இல்லாமல் உடைந்தும் வீணாகியுள்ளது. திருமூர்த்தி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி இல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர். 

நீண்ட காலமாக நீடிக்கும் இப்பிரச்சினைக்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள தளி பேரூராட்சி மக்கள் நிர்வாகத்தினர் தீர்வு ஏற்படுத்தி படகுகளை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Tags:    

Similar News