உள்ளூர் செய்திகள்
பாரதியார்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கு

Published On 2022-03-06 06:19 GMT   |   Update On 2022-03-06 06:19 GMT
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டுப் பன்னாட்டு ஆய்வரங்கு வருகிற 30, 31-ந்தேதிகளில் நடக்கிறது.
தஞ்சாவூர்:

மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டை ஒட்டி, தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அயல் நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மற்றும் வானவில் பண்பாட்டு மையம் ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைந்து “மகாகவி பாரதியாரின் உரைநடை ஆக்கங்கள்” என்ற பன்னாட்டு ஆய்வரங்கினை எதிர்வரும் மார்ச், 30-, 31 ஆகிய இரு நாட்கள் நடத்தவுள்ளன.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள இந்த ஆய்வரங்கில், மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்தியா, இலங்கை மற்றும் உலகநாட்டுப் பாரதியியல் ஆய்வாளர்கள் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுத்தாள்களை வழங்கவுள்ள இப்பன்னாட்டு ஆய்வரங்கில், டாக்டர் சுதாசேஷய்யன், பேராசிரியர். ய.மணிகண்டன் மற்றும் சொல்வேந்தர் சுகிசிவம் ஆகியோரின் உரையரங்குகளும்  இடம் பெறவுள்ளன. 

பாரதியாரின் பாடல்களில் பிரபலப்பாடகி மஹதி வழங்கும் இசைநிகழ்வும், பாரதியாரின் ஓவியங்கள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொதுவாக மகாகவியின் பாடல்களை மையமாக வைத்தே கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வரும் சூழலில், பாரதியாரின் எழுத்துவன்மை ஓங்கி நிற்கும் அவருடைய கட்டுரைகள் மற்றும் கதைகளை மையமிட்டு இந்தப் பன்னாட்டு ஆய்வரங்கு நடைபெறவுள்ளதென,  தமிழ்ப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் முனைவர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். 

இப்பன்னாட்டு ஆய்வரங்கின் ஒருங்கிணைப்பாளர்களாக,  முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன், வானவில் கே.ரவி மற்றும் இலங்கையின் முனைவர் ஸ்ரீபிரசாந்தன் ஆகியோர் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். 

ஆய்வரங்கின் முதல்நாள் கட்டுரையாளர்களின் ஆய்வுக்கோவை வெளியிடப்படவுள்ளது. மேலும் இப்பன்னாட்டு ஆய்வரங்கிற்கான இலச்சினை வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News