உள்ளூர் செய்திகள்
கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்

ராணிப்பேட்டையில் இலங்கைத் தமிழர்கள் குடியிருப்புகளுக்கு அமைக்க நிலம் கையகப்படுத்த உத்தரவு

Published On 2022-03-02 16:49 IST   |   Update On 2022-03-02 16:49:00 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு 392 குடியிருப்புகளுக்கு நிலம் கையகப்படுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி, சோளிங்கர் தாலுக்கா பாணாவரம் ஆகிய இடங்களில் இலங்கை தமிழர் குடியிருப்புகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை புனரமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடந்தது. 

கூட்டத்திற்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது: வாலாஜா தாலுக்கா திருமலைச்சேரி ஊராட்சியில் 292 குடும்பங்களும், சோளிங்கர் தாலுகா பாணாவரம் ஊராட்சியில் 90 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஏற்கனவே வழங்கப்பட்ட மின் இணைப்பு கம்பிகள் பல இடங்களில் பழுதடைந்துள்ளது. அனைத்துக் குடியிருப்புகளிலும் கழிப்பறை கட்டமைப்புகள் பழுதடைந்துள்ளதையும் சீர் செய்திட நிதி வரப்பெற்றுள்ளது. 

இப்பணிகளை மேற்கொள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை இணைந்து தேவைப்படும் திட்ட அறிக்கையை தயார் செய்து பணிகளை முடிக்க வேண்டும். பாணாவரம் குடியிருப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் நிதியை முறையாக பயன்படுத்தி பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். 

தமிழக முதல்வர் அறிவித்த புதிய குடியிருப்புகள் திட்டத்தில் 392 வீடுகள் ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றுள்ளது.அதற்கான நிலம் எடுப்பு பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பேசினார். 

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மத் அஸ்லம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், புலம்பெயர்ந்த இலங்கை வாழ் தமிழர் மறுவாழ்வு துறை தாசில்தார் பாக்கியநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News