உள்ளூர் செய்திகள்
நெமிலி பா.ம.க. வேட்பாளர் கடத்தப்பட்டாரா? உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
நெமிலி பா.ம.க. வேட்பாளர் கடத்தப்பட்டதாக உறவினர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த காவேரிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர் (52).இவர் நெமிலி நகர பாமக செயலாளராக கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நெமிலி பேரூராட்சி 3 வது வார்டில் பாமக சார்பில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழநி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பாமக பிரமுகர்கள் தங்கள் கட்சியை சேர்ந்த சந்திரசேகரை சிலர் கடத்தி விட்டதாக அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.
இந்நிலையில் நெமிலி சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சந்திரசேகரை மீட்டுள்ளனர்.
ஆனால் இதுவரை சந்திரசேகர் வீடு திரும்பவில்லை.இதனால் சந்திரசேகர் மனைவி செல்வி (42).தனது கணவரை போலீசார் மறைத்து வைத்துள்ளனர் என்று ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகம் மற்றும் அரக்கோணம் டிஎஸ்பி அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளார்.
ஆனால் இதுவரை சந்திரசேகர் வீடு திரும்பாததால் அவரது மனைவி செல்வி மன உளைச்சலுக்கு ஆளாகி உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சந்திரசேகர் மகன்கள் மோகன்ராஜ் (25). குணா (23). மற்றும் 3 வந்து வார்டு பொதுமக்கள் உடனடியாக சந்திரசேகரை போலீசார் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நெமிலி பஸ்ஸ்டாண்டில் பந்தல் அமைத்து சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
அப்போது அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ், நெமிலி தாசில்தார் ரவி, நெமிலி போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.