உள்ளூர் செய்திகள்
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடை : அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி
மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் மாசிக்கொடையில் அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனியாக வந்தார்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலும் ஒன்று. கேரள பெண் பக்தர்கள் இரு முடிக்கட்டி இங்கு வந்து அம்மனை வழிபடுவதால் இக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கப்படுகிறது.இங்கு ஆண்டுதோறும் மாசிக்கொடை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 10 நாட் கள் வெகு சிறப்பாக நடக்கும்.
மாசிக்கொடையின்போது கேரள மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் மண்டைக்காடு வந்து கொடை விழாவில் கலந்து கொள்வர்.
இந்த ஆண்டின் மாசிக் கொடை விழா நேற்று முன்தினம் காலை 8 மணியளவில் திருக்கொடி யேற்றத்துடன் தொடங்கியது.நேற்று 2-ம் நாள் காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, மதியம் 1 மணிக்கு உச்சபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 9 மணிக்கு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.
இன்று (செவ்வாய்க்கிழமை) 3-ம் நாள் காலை 6.30 மணிக்கு உஷ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடந்தது. பவனி கோவிலின் நான்கு வீதிகளிலும் சென்று பின்னர் கோவில் வந்தடைந்தது. பவனியின்போது பக்தர்கள் தங்கள் கடை, வீடுகளுக்கு முன்பு பூஜை பொருட்கள் வைத்து பரவசத்துடன் அம்மனை வழிப்பட்டனர். மதியம் 1 மணிக்கு உச்ச பூஜை நடந்தது.
மாலை 6.30 மணியளவில் கீழ்கரை பிடாகை சடையப்பர் கண்டன் சாஸ்தா கோவிவிலிருந்து யானை மீது களப பவனி புறப்பட்டு ஸ்ரீ உண்ணி கிருஷ்ணன் கோவில் வழியாக மண்டைக்காடு பகவதியம்மன் கோவில் வந்தடைதல் மற்றும் சாய ரட்சை பூஜை, இரவு 8 மணிக்கு கதகளி, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி நடக்கிறது.
ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் கம்பராமாயணம் தொடர் விளக்கவுரை, பக்தி பஜனை, பக்தி கான இசை, ஆன்மீக உரை, பரத நாட்டியம் மற்றும் சமய மாநாடு ஆகியவை நடக்கிறது.