உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை விழாவிற்கு கடும் கட்டுப்பாடு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மயான கொள்ளை விழாவிற்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் மயான கொள்ளை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு வருகிற 1, 2-ந் தேதிகளில் 2 நாட்கள் (செவ்வாய், புதன்கிழமை) நடைபெற உள்ளது.
மயான கொள்ளை தேரின் உயரம் அதன் அடிப்பாகம் உள்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.மயான கொள்ளை சாமி சிலை அமைக்கப்பட்ட வாகனத்தில் தீ பிடிக்க கூடிய வகையில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தாமல், மின்சாதனப் பொருட்கள் அனைத்தும் எளிதில் தீப்பிடிக்காத வகையில் உள்ளதா? என தீயணைப்பு துறையினர் ஆய்வு செய்தல் வேண்டும்.
மேலும் தேவையான முதலுதவி பொருட்கள் வைத்திருக்க வேண்டும்.கூம்பு வடிவ ஒலி பெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும். ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் இருக்க வேண்டும்.
சட்டத்திற்குப் புறம்பான வகையில் செயல்பட கூடாது, மின் திருட்டு செய்திகள் கூடாது.
அரசியல் கட்சியினர், மதத்தலைவர்கள் பேனர்கள் வைத்தல் கூடாது. அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் மதசார்பின்மை பாதிப்பு ஏற்படாத வகையில் வருவாய், காவல்துறையினர் விதிக்கும் நிபந்தனைகளை கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும்.
சாமி சிலை ஊர்வலங்கள் பகல் 12 மணிக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மதியம் 3 மணிக்குள் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே பிற மதத்தவர்களின் வழிபாட்டுத் தலங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாத வகையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
சாமிசிலைகளை நான்கு சக்கர வாகனங்கள் அதாவது மினி லாரி, டிராக்டர் மூலமாக மட்டுமே ஏற்றி செல்ல வேண்டும். மாட்டு வண்டிகள், மீன்பாடி வண்டிகள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களில் ஏற்றிச் செல்லக்கூடாது.
சிலைகள் ஊர்வலத்தின் போது எவ்வித பட்டாசு மற்றும் வெடிபொருட்கள் வெடித்தல் கூடாது.பாலாற்றில் மாலை 5 மணிக்குள் பூஜை முடித்துக் கொண்டு, இரவு 7 மணிக்குள் அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெறும் வகையில் இருக்க வேண்டும்.
ஊர்வலத்தின்போது பூ அலங்காரங்கள் அலங்காரப் பொருட்கள் மறு சுழற்சி முறையிலான பொருட்கள் பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும்.
சாமி ஊர்வலங்கள் முடிவுற்ற பிறகு 48 மணி நேரத்திற்குள் உள்ளாட்சி, நகராட்சி துறையினர் சிலைகள் வைக்கப்பட்ட இடத்தில் குவிக்கப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.
மது அருந்திய நிலையில் விழாக்குழுவினர் யாரும் மயானக்கொள்ளை ஊர்வலத்தில் கலந்து கொள்ளக் கூடாது.இதனை போலீசார் கண்காணித்து சட்டம், ஒழுங்கிற்கு ஊறு விளைவிப்பவை அப்புறப்படுத்த வேண்டும்.
தேவை இல்லாமல் பொது மக்களுக்கோ அல்லது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்டவுட், சீரியல் செட் போன்றவற்றை பொது இடங்களில் அமைக்க கூடாது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.