உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க.

Published On 2022-02-23 14:15 IST   |   Update On 2022-02-23 14:15:00 IST
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளையும் தி.மு.க. கைப்பற்றியது.
ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகராட்சியில் இந்த தேர்தலில் தி.மு.க 24 வார்டிலும், அதன் கூட்டணியான காங்கிரஸ் ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர அ, தி.மு.க 8 வார்டிலும், அ.ம.மு.க 1 வார்டிலும், சுயேச்சைகள் 2வார்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

இதன்மூலம் அரக்கோணம் நகராட்சியில் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிக்கு எதிர்க் கட்சிகள் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதேபோல் ஆற்காடு நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 18 வார்டுகளை தி.மு.க பிடித்துள்ளது. ராணிப்பேட்டை நகராட்சியில் உள்ள 30 வார்டுகளில் 23 வார்டுகளை தி.மு.க தக்கவைத்துள்ளது. 

வாலாஜா நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் 15 இடங்களிலும், மேல்விஷாரம் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 15 இடங்களிலும், சோளிங்கர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் 15 இடங்களை தி.மு.க கைப்பற்றியுள்ளது.

இதே நிலைதான் திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களிலும் உள்ளது இங்குள்ள குடியாத்தம் பேரணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் என அனைத்து நகராட்சிகளிலும் தி.மு.க அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது.

அதன்படி 3 மாவட்டங்களிலும் உள்ள 12 நகராட்சிகளிலும் தனி மெஜாரிட்டியுடன் தி.மு.க வெற்றி பெற்றுள்ளதால் தலைவர், துணை தலைவர் பதவிகளுக்காக கவுன்சிலர்கள் கடத்தல், குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா மார்ச் 2-ந் தேதி நடக்கிறது.

மார்ச் 4-ந்தேதி மறைமுக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் கவுன்சிலர்கள் ஒன்றுசேர்ந்து நகராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News