உள்ளூர் செய்திகள்
திருமுல்லைவாசல் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
திருமுல்லைவாசல் பஸ் நிறுத்தத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஜெயபிரகாஷ் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் பானு சேகர், ஒன்றிய ஆணையர்ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய பணி மேற்பார்வையாளர் திருச்செல்வம் வரவேற்றார். ஒன்றிய கணக்காளர் கஜேந்திரன் அறிக்கையைப் படித்தார். பின்னர் கூட்டத்தில் நடந்த விவாதங்கள்.
அங்குதன் (திமுக) வேட்டங்குடி ஊராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், முத்தரையர் கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
லட்சுமிபாலமுருகன் (திமுக) மயிலாடுதுறை மாவட்டத்தில் மருத்துவ கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றி. சிதம்பரத்திலிருந்து காட்டூர் கிராமத்திற்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.கோட்டையமேடு கிராமத்தில் மக்கள் யாரும் வசிக்காததனால் தனி தீவாக இருந்து வருகிறது.
எனவே அங்கு சுற்றுலா மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புளியந்துறை ஊராட்சியில் புதிய கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மகேந்திரப் பள்ளி திருமேனியழகர் கோயில் கும்பாபிஷேகம் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். கொள்ளிடத்தில்தனி தாலுகாவாக அமைக்க வேண்டும்.
மாலினி பூவரசன் (திமுக) திருமுல்லைவாசல் ஊராட்சியில்புதிய பஸ் நிலையம் கட்டும் பணி மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சியில் உயர் கோபுர மின் விளக்கு எரியாத நிலையில் உள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் தெரு விளக்குகளுக்குஎல், இ, டி பல்புகள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
திருமுல்லைவாசல் பஸ் நிறுத்தம் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.அதனை தடுக்கும் விதத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரீகன் (அதிமுக) ஆரப்பள்ளம் ஊராட்சி நடுநிலைப் பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய பள்ளி கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவபாலன் (பாமக) கோதண்ட புரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பில் படுகை கிராமத்தில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும்.
பானு சேகர் (காங்) புத்தூரில் இருந்து கொள்ளிடம் வரை சாலையோர தூய்மை பணிகளை அதிகரிக்க வேண்டும். கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சியில் மாதம் ஒருமுறை உறுப்பினர்கள் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். குத்தவா கரை கிராமத்திற்கு சுடுகாட்டு சாலை அமைத்து தர வேண்டும்.
ஒன்றிய ஆணையர். கொள்ளிடம் ஒன்றியத்தில் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 14 ஆயிரத்து 847 பயனாளிகள் உள்ளனர் இதில் அனைவருக்கும் வீடு கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒன்றிய குழு தலைவர். கொள்ளிடத்தை மையமாகக்கொண்டு தலைமை மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொள்ளிடம் ஒன்றியத்தில் உள்ள பெரிய ஊராட்சிகள்ஆனைக்காரன் சத்திரம், கோபாலசமுத்திரம், புதுப்பட்டினம், திருமுல்லைவாசல், ஆகிய பெரிய ஊராட்சிகளை இரண்டாக பிரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கொள்ளிடம் ஒன்றியத்தில் இந்த ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 5 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்த ஊராட்சிக்கு அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து முடிக்கப்படும். மேலும் படிபடியாக அடுத்து ஆண்டு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் சேர்க்கப்படும். கொள்ளிடத்தில் தலைமை இடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.
கூட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் சபிதா ராணி. அரசு மருத்துவர் சிவனேசன், ஒன்றிய பொறியாளர் தாரா, வட்டார கல்வி அலுவலர் நாராயணன். மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வமுத்து நன்றி கூறினார்.