உள்ளூர் செய்திகள்
ராணிப்பேட்டைவாக்குச்சாவடி மையங்களில் 961 போலீசார் தீவிர கண்காணிப்பு
ராணிப்பேட்டை வாக்குச்சாவடி மையங்களில் 961 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, வாலாஜா, விஷாரம், ராணிப்பேட்டை, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய 6 நகராட்சிகள், அம்மூர், காவேரிப்பாக்கம், கலவை, திமிரி, விளாப்பாக்கம், தக்கோலம், பனப்பாக்கம், நெமிலி ஆகிய 8 பேரூராட்சிகள் மொத்தமாக உள்ள 288 பதவியிடங்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது.
288 பதவிடங்களில் 4 பேர் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதமுள்ள 284 பதவியிடங்களுக்கு சுயேட்சைகள் உட்பட அனைத்து கட்சியின் சார்பில் 1071 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 3,31,284 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க மாவட்டம் முழுவதும் 411 வாக்கு பதிவு மையங்களும், 496 எந்திரங்களும் தயார் செய்யப்பட்டுள்ளன.வாக்கு பதிவு மையங்களில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் 1823 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு மையங்களில் பாதுகாப்பு பணிகளுக்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன் உத்தரவின் பேரில் 961 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.23 மிகப்பதட்டமான வாக்குசாவடி மையங்களும், 58 பதட்டமான வாக்குசாவடி மையங்களும் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.