உள்ளூர் செய்திகள்
நெல் அறுவடை எந்திரம் மோதி குழந்தை பலி
பெரம்பலூர் அருகே வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த 1 வயது குழந்தை நெல் அறுவடை எந்திரம் மோதி பலியானது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் சத்தியசீலன் மகள் யாஷிகா (வயது 1).
இந்த குழந்தை இன்று வீட்டின் அருகே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. அவரது தாய் மற்றும் உறவினர்கள் வீட்டில் வேலையில் கவனம் செலுத்தி இருந்தனர்.
அப்போது அதே ஊரை சேர்ந்த ஆனந்த் என்பவர் நெல் அறுவடை எந்திரத்தை ஓட்டி வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக சாலையில் விளையாடிக் கொண்டிருந்த யாஷிகா மீது நெல் அறுவடை எந்திரம் மோதியது.
இதில் படுகாயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அரும்பாவூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை யாஷிகா பரிதாபமாக உயிரிழந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.