உள்ளூர் செய்திகள்
குடியாத்தத்தில் சாராயம் கடத்திச்சென்ற வாலிபர் பைக் விபத்தில் பலி
குடியாத்தம் அருகே சாராயம் கடத்திச்சென்ற வாலிபர் பைக் விபத்தில் இறந்தார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து பரவக்கல் செல்லும் சாலையில் செட்டி குப்பம் கிராமம் சுடுகாடு அருகே சாலையின் வளைவில் இன்று விடியற்காலை மோட்டார் சைக்கிளில் லாரி டியூப்பில் சாராயத்தை வைத்து வேகமாக சென்ற வாலிபர் ஒருவர் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் சுவற்றில் வேகமாக மோதி உள்ளார்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே அந்த வாலிபர் பலத்த காயங்களுடன் பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக குடியாத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து விரைந்து வந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் விபத்தில் இறந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தீவிர விசாரணை நடத்தியதில் பேர்ணாம்பட்டு அடுத்த சாத்கர் கள்ளிச்சேரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சகாயம் வயது 22 என்பது தெரியவந்தது.