உள்ளூர் செய்திகள்
பெரம்பலூர் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் 2 பேர் பலியாயினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா அழகிரிபாளையம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது23). இவரது நண்பர் பெரம்பலூர் திருநகரை சேர்ந்த குணசீலன் (22). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் நேற்று வேப்பந்தட்டைக்கு சென்று விட்டு இரவு 9.30 மணியளவில் வீடு திரும்பினர்.
பெரம்பலூர் மாவட்டம் எசனை அருகே சென்ற போது எதிரே ஜெனரேட்டர் ஏற்றிக்கொண்டு வந்த லாரி மீது எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆனந்தராஜ், குணசீலன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிந்து லாரி டிரைவர் சேலம் மாவட்டம், வீரகனூர் அருகே உள்ள ராயபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.