உள்ளூர் செய்திகள்
பண்ணையில் வளர்க்கப்படும் நாய்கள் ஆடுகளை கொன்று வருவதால் பொது மக்கள் சாலை மறியல்
நாகை அருகே பண்ணையில் வளர்க்கப்படும் நாய்கள் ஆடுகளை கொன்று வருவதாக இறந்த ஆடுகளுடன் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூரில் ஒருவர் நாய் பண்ணை நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் சுமார் 250 நாய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த இடத்திலிருந்து நாய்கள் பாதுகாப்பு இல்லாமல் பண்ணையை சுற்றி உள்ள வீடுகளில் வளர்க்கக்கூடிய ஆடுகளை கொன்று விடுவதாகவும், பொதுமக்களையும் கடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அந்த நாய் பண்ணையை அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த பகுதி பொதுமக்கள் பிரதாபராமபுரத்தில் வேளாங்கண்ணி - திருத்துறைப்பூண்டி செல்லும் கடற்கரைச் சாலையில் நாய் கடித்து இறந்த ஆட்டுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை வருவாய் கோட்டாட்சியர் மணிவேலன், போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஒருவாரத்தில் நாய் பண்ணையை அப்புறப் படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியதன் பேரில் மறியல் கைவிடப்பட்டது.
இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.