உள்ளூர் செய்திகள்
வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்காக எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்- மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போட திட்டம் போட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அப்போது தஞ்சை மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்ட மு.க.ஸ்டாலின், நிதிநிலை அறிக்கையின்போது வெளியிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளையும் குறிப்பிட்டு, அந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறினார்.
மேலும் அவர் பேசியதாவது:-
காவிரி மண்ணுக்கும்- வேளாண் பெருங்குடி மக்களுக்கும்- இந்த ஸ்டாலின் என்றும் துணை இருப்பான். 2017-ஆம் ஆண்டு காவிரி விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் இறுதி விவாதம் வந்தபோது, தமிழ்நாடு அரசு சரியாக வாதிடவில்லை. அழுத்தமான வாதங்களை வைக்கவில்லை. அந்த நிலையில் வழக்கின் இறுதித் தீர்ப்பு 2018-ஆம் ஆண்டு வந்தது. அதில், 14.75 டி.எம்.சி. நீரைக் கோட்டை விட்ட ஆட்சிதான் பழனிசாமி ஆட்சி!
அதன்படி காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு உடனடியாக, நீர் தாவா முறைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் தேர்தலை மனதில் வைத்து ஒன்றிய பா.ஜ.க. அரசு- இதனைச் செயல்படுத்தவில்லை. ‘பல்லக்குத் தூக்கி’யாக இருந்த முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியும் ஒன்றிய அரசைத் தட்டிக் கேட்கவில்லை. ஆனால், உடனே காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்று போராடியதும் திமுகதான். தமிழ்நாடு வந்த பிரதமருக்குக் கருப்புக் கொடி காட்டினோம். கருப்பு பலூன்களையும் பறக்கவிட்டோம். காவிரி உரிமை மீட்புப் பயணத்தை நான் மேற்கொண்டேன். இரண்டு குழுக்களாக இந்தப் பயணத்தை திமுக நடத்தியது. திருச்சி முக்கொம்பில் இருந்து நான் பயணம் மேற்கொண்டேன். நம் கூட்டணிக் கட்சிகளாக இருக்கும் பொதுவுடைமைத் தோழர்கள்- உழவர் பேரியக்கங்கள்- உள்ளிட்ட பலரும் காவிரியில் நமது உரிமையைக் காக்கப் போராடினோம்.
காவிரி மேலாண்மை வாரியம் என்ற பெயரால் டெல்லியில்தான் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சொன்னோம். ஆனால், ஒன்றிய அரசு அதிகாரமற்ற ஒரு அமைப்பை- நீர்வளத்துறையோடு சேர்ந்த ஒரு அமைப்பை- ‘காவிரி மேலாண்மை ஆணையம்’-என்று தொடங்கியது. அதற்கும் ‘ஜால்ரா’ போட்டு, ஆட்சியில் இருந்த பழனிசாமி ஒன்றிய பா.ஜ.க. அரசை தட்டிக் கேட்கவில்லை. மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்கான தண்ணீர் வரத்து குறைந்துவிடும். கர்நாடக அரசியல் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை அப்போது கர்நாடக அரசு பார்த்தது. ஆனால் தமிழ்நாட்டுக் கட்சிகளை அழைத்து சென்று, பிரதமரை பழனிசாமி சந்திக்கவில்லை.
இவ்வாறு தஞ்சை மாவட்ட உழவர்களுக்கு மட்டுமல்ல- டெல்டா மாவட்டங்களுக்கு மட்டுமல்ல- தமிழ்நாட்டு உழவர்களுக்கு மட்டுமல்ல- மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிச்சு வாக்களித்ததன் மூலமாக - ஒட்டுமொத்த இந்திய வேளாண் பெருங்குடி மக்களுக்கே, துரோகியாக விளங்கியவர்தான் பழனிசாமி! அவரை ‘பா.ஜ.க’ பழனிசாமி என்றே அழைக்கலாம்! அந்தளவிற்கு பா.ஜ.க. வாய்ஸில் ‘மிமிக்ரி’ செய்துகொண்டு இருக்கிறார்!
பச்சைத் துண்டை தோளில் போட்டுக்கொண்டு நாடகமாடி, உழவர்களுடைய தலையில் துண்டு போட திட்டம் போட்டவர்தான் பழனிசாமி! அப்படிப்பட்ட துரோகம் செய்த பழனிசாமியைத்தான் இந்தத் தேர்தலில் நீங்கள் தோற்கடிக்க வேண்டும். ஏற்கனவே நீங்கள் தோற்கடித்தீர்கள்.
இப்போதாவது போராடிய உழவர்களை ‘தரகர்கள்’ என்று கொச்சைப்படுத்தியதற்கும் - மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததற்கும் - வேளாண் பெருங்குடி மக்களிடம் மன்னிப்பு கேட்பீர்களா? உழவர்களுக்குச் செய்த துரோகத்திற்கும் மண்டியிட்டு மன்னிப்புக் கேளுங்கள்! பெரிய மனது படைத்தவர்கள் நமது உழவர்கள்! நிச்சயம் உங்களை மன்னிப்பார்கள்!
நாடாளுமன்றத் தேர்தலிலும் -சட்டமன்றத் தேர்தலிலும் - ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் கொடுத்த சவுக்கடியை - தண்டனையை - இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.க.விற்கு தாருங்கள்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.