உள்ளூர் செய்திகள்
பேச்சியம்மாள்

ஹலோ போலீஸ் தொலைபேசி எண்ணால் கண்டுபிடிக்கப்பட்ட சாயல்குடி பெண்

Published On 2022-02-15 16:45 IST   |   Update On 2022-02-15 16:45:00 IST
4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை சேர்ந்த பெண் ஹலோ போலீஸ் தொலைபேசி எண் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவித்து, நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹலோ போலீஸ் 83000 31100 என்ற தொலைபேசி எண் பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் அந்த ஹலோ போலீஸ் எண்ணுக்கு கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டம் சித்தாபூரில் அமைந்துள்ள மறைந்த பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் பெயரில் இயங்கி வரும் ஆதரவற்றோர் ஆசிரமத்தில் இருந்து கவிதா என்பவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது அவர், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 60) என்பவர் தங்களின் ஆசிரமத்தில் இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து பேச்சியம்மாளின் மூத்த மகன் முனீஸ்வரனை அணுகி பேச்சியம்மாளின் புகைப்படத்தை காண்பித்தனர். அப்போது புகைப்படத்தில் இருந்தது 4 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன அவரது தாயார் பேச்சியம்மாள் என்பது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து பேச்சியம்மாளின் குடும்பத்தினர் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அந்த ஆசிரமத்திற்கு நேரில் சென்றனர். காணாமல் போன நிலையில் எங்கு இருக்கிறார் என்பது தெரியாமல் தவித்த பேச்சியம்மாளின் குடும்பத்தினர், அவரை கண்டதும் மகிழ்ச்சியடைந்தனர்.

பின்பு அவரை அங்கிருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர். 4 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பேச்சியம்மாளை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் இயங்கும் பிரத்யேக ஹலோ போலீஸ் எண் மூலம் கண்டுபிடித்து குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஹலோ போலீஸ் தொலைபேசி சேவை சிறப்பாக இயங்கி வருகிறது. அந்த தொலைபேசி எண் மூலம் 4 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான சாயல்குடி பெண் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார் என்றார்.

Similar News