உள்ளூர் செய்திகள்
அரசியல் கட்சி தலைவர்கள் சுற்றுப்பயணம்
தேர்தல் பிரசாரம் நாளை மறுநாள் முடிவதால் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்களில் பலர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு வருகிற 19-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 28ம் தேதி தொடங்கி 4-ந்தேதி வரை நடந்தது. அப்போது மதுரை மாவட்டத்தில் 2347 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனை 5-ம்தேதி நடந்தது. இதில் 2313 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற பிப்ரவரி 7-ம்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் 313 கவுன்சிலர் பதவிக்கு அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் உள்பட 1702 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்தநிலையில் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்களில் பலர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரம் 17ந்தேதி மாலை 6 மணிக்கு முடிவடைய உள்ளதால் மதுரையில் வேட்பாளர்கள் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பேசினார். தி.மு.க.வின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை ஒபுளா படித்துறையில் பிரசாரம் செய்தார்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பழங்காநத்தம் பகுதியில் இன்று மாலை பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுகிறார்.
மதுரை மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நடிகர் கமலஹாசன் இன்று காலை மதுரைக்கு வந்தார். தனியார் ஓட்டலில் தங்கிய அவர், இன்று மாலை பெரியார் பேருந்து நிலையம், திருப்பரங்குன்றம் உள்பட பல்வேறு பகுதி களுக்கும் செய்தார்.
மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஒரே நேரத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் குவிந்துள்ளதால் பிரசாரம் அனல்பறந்து வருகிறது.