உள்ளூர் செய்திகள்
மஞ்சுவிரட்டு

சிங்கம்புணரி அருகே மஞ்சுவிரட்டு

Published On 2022-02-15 16:05 IST   |   Update On 2022-02-15 16:05:00 IST
சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறையில் பிரசித்திபெற்ற மஞ்சுவிரட்டு நாளை நடக்கிறது.
சிங்கம்புணரி

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே  உள்ள அரளிப்பாறையில்  பிரசித்தி பெற்ற மஞ்சுவிரட்டு மாசி மகத்தை ஒட்டி நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் நாளை மாசிமகத்தையொட்டி மஞ்சுவிரட்டு நடக்கிறது. 

இதன் முன்னேற்பாடாக தடுப்புவேலி அமைத்தல் மற்றும் மஞ்சுவிரட்டு திடலை சுத்தம் செய்யும் பணி நடக்கிறது.  ஊர் பெரியோர்கள், அதிகாரிகள் அமருவதற்கு பரண்கள் கட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் தனிச்சிறப்பு பெற்றது. ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு. தென் மாவட்டங்களான சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றாலும் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகில் உள்ள அரளிப்பாறையில் நடைபெறும் இந்த மாசிமகம் மஞ்சுவிரட்டு மிகவும் தனிச்சிறப்பு பெற்றது.

இயற்கை பரணாக அமைந்துள்ள பாறையில் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் அமர்ந்து பாதுகாப்பாக பார்ப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.  

பாறையில் மேல் உள்ள பாலமுருகன் கோவில் மேற்கு பார்த்து இருப்பது தனி சிறப்பு. இந்த கோவிலில் பிரசாதமாக மரிக்கொழுந்து  பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. 

இந்த கோவில் அமைந்துள்ள பாறையின் அடிவாரத்தில்  உள்ள வாடிவாசலில் நாளை நடக்கவிருக்கும் மாசிமகம் மஞ்சு விரட்டுக்கு அனைத்து ஏற்பாடுகளும் வருவாய்த்துறையினர்கள் கோட்டாட்சியர் பிரபாகரன், வட்டாட்சியர் கயல்செல்வி, வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்பார்வையில் செய்து வருகின்றனர்.


Similar News