உள்ளூர் செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்

கிரிவலம் செல்ல 2 ஆண்டாக தொடரும் தடை உத்தரவு- அனுமதி வழங்க பக்தர்கள் வலியுறுத்தல்

Published On 2022-02-15 16:01 IST   |   Update On 2022-02-15 16:01:00 IST
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு சிவபெருமான் மலையாக எழுந்தருளியிருப்பது இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். இதனால் கோவில் வரும் பக்தர்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதிலும் மாதந்தோறும் பவுர்ணமி நேரத்தில் கிரிவலம் சென்றால் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக ஒவ்வொரு பவுர்ணமி தினத்திலும் திருவண்ணாமலையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டு கிரிவலம் செல்வார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் 2 ஆண்டாக திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது.

வருகிற மார்ச் மாதம் வந்துவிட்டால் 2 ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாமாண்டு தொடங்கிவிடும்.

இந்த இடைப்பட்ட காலங்களில் கார்த்திகை மாத பவுர்ணமி நாளில் கோர்ட்டு உத்தரவின் பேரில் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வீதம் பக்தர்கள் வீதம் 2 நாட்கள் 20 ஆயிரம் பக்தர்கள் மட்டும் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

தற்போது நகர்மன்ற உள்ளாட்சி தேர்தல காரணம்காட்டி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் திருவண்ணாமலையில் பவுர்ணமியை முன்னிட்டு இன்று இரவு 10.30 மணி முதல் நாளை (16-ந்தேதி) இரவு 10.30 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம். பக்தர்கள் நலன் கருதி கொரோனா முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

திருவண்ணாமலையில் நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். ஆனால் இன்று பக்தர்கள் வருகை குறைவாகவே உள்ளது.

இன்று இரவு கிரிவலம் செல்ல அதிகளவில் பக்தர்கள் வரலாம் என்று கருதப்படுவதால் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருவதால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்டுப்பாடுகளுடன் பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Similar News