134-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் அனுராதா பாலாஜிக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு திரட்டினார்
சென்னை:
சென்னை மாநகராட்சி தேர்தலில் 134-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அனுராதா பாலாஜி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அனுராதா பாலாஜியை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மேற்கு மாம்பலம் பகுதியில் பிரசாரம் செய்தார். அனுராதா பாலாஜிக்கு இரட்டை இலைக்கு வாக்களிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
அ.தி.மு.க. மாவட்ட, பகுதி, வட்ட கழக நிர்வாகிகளும் உடன் சென்று ஆதரவு திரட்டினர். முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுராதா பாலாஜி பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.
மேலும் வேட்பாளர் அனுராதா பாலாஜி வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் கொடுத்து ஓட்டு கேட்டு வருகிறார். என்னை தேர்வு செய்தால் 134-வது வார்டை சென்னை மாநகராட்சியிலேயே முதன்மை வார்டாக மாற்றுவேன் என்றும் முழு நேரமும் மக்கள் நலனுக்காகவே உழைப்பேன் என்றும், அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தருவேன் என்றும் வாக்குறுதி அளித்து ஓட்டு கேட்டார்.
அவருக்கு வழி நெடுகிலும் பெண்கள் திரண்டு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இரட்டை இலைக்கு ஓட்டு போடுவதாகவும் உறுதி அளித்தனர்.