உள்ளூர் செய்திகள்
வரதட்சனை கேட்டு சித்ரவதை அடித்து உதைத்ததால் இளம்பெண் கரு கலைந்தது
வரதட்சனை கேட்டு அடித்து உதைத்ததால் இளம்பெண் கரு கலைந்தது.
தருமபுரி:
கணவர் மற்றும் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அடித்து உதைத்து கொடுமை படுத்தியதால் தனது கரு கலைந்து விட்டதாக கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் தன் உறவினர்களுடன் புகார் மனு அளித்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை சேர்ந்தவர் சக்திவேல் மகள் திவ்யா (வயது25). இவர் நேற்று தருமபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து குறைதீர்க்கும் முகாம் பெட்டியில் மனு அளித்துள்ளார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது:
தருமபுரி அடுத்த ஒட்டப்பட்டியை சேர்ந்த வெங்கடாஜலம் மகன் மூர்த்தி என்பவருக்கும், எனக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. நான் இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கட்டிட மேஸ்திரியான எனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு என்னை துன்புறுத்தினர்.
பெற்றோர் வீட்டிற்கு சென்று மேலும் 5 பவுன் நகை வாங்கி வருமாறு அடித்து சித்ரவதை செய்தனர். இதில் எனது கரு கலைந்துவிட்டது கணவன் வீட்டாரின் கொடுமை தாங்காமல் தற்போது பெற்றோருடன் வசித்து வருகிறேன்.
இதுதொடர்பாக கடந்த ஜனவரி 15&ந் தேதி தருமபுரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எனது மனு மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்.
இவ்வாறு திவ்யா தெரிவித்துள்ளார்.