உள்ளூர் செய்திகள்
பரமத்திவேலூர் அருகே மர்மமாக இறந்து கிடந்த வாலிபர்
பரமத்திவேலூர் அருகே உள்ள ஒரு மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூரை அடுத்த வீரணம்பாளையம் அருகே சுண்டப்பனையில் உள்ள வக்கீல் வெங்கடாசலத் திற்கு சொந்தமான மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் தொழிலாளர்கள் மரவள்ளிக் கிழங்குகளை அறுவடை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்கு இடையே சுமார் 27 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பது தெரியவந்தது.
இதுகுறித்து வீரணம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் கந்தசாமி பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியதில் பிணமாக கிடந்தவர் பரமத்திவேலூர் பொன்னி நகரைச் சேர்ந்த முருகேசன் என்பவர் மகன் பாரதிராஜா (27) என்பதும், இவர் கேட்டரிங் படித்து முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் நேற்று முன்தினம் காலை திருமண நிகழ்ச்சிக்கு செல்வதாக தனது பெற்றோர்களிடம் கூறி சென்றவர் மரவள்ளி கிழங்கு தோட்டத்தில் பிணமாக கிடந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து மர்மமான முறையில் இறந்து கிடந்த பாரதிராஜா குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர் எப்படி இறந்தார்? அவரை மர்ம நபர்கள் கொலை செய்து மரவள்ளி தோட்டத்தில் வீசி சென்றனரா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.