பண்ருட்டி அருகே பணத்துக்காக கார் புரோக்கரை கடத்திய டிரைவர் கைது
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஊமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன் (வயது 42). கார் புரோக்கர். இவர், மதுரையில் உள்ள உத்தங்குடி வளர்நகரில் தற்போது வசிக்கிறார்.
இவர், தொழிலில் ஏற்பட்ட கடனை அடைக்க பண்ருட்டி அருகே காட்டாண்டிக்குப்பம் அன்பு ராஜா என்பவரிடம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கிஇருந்தார். பின்னர் அன்புராஜா அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து 20 லட்சம் ரூபாய் தரவேண்டும் என மதியழகனிடம் கேட்டார்.
இதற்காக மதியழகன் தனக்கு சொந்தமான 60 சென்ட் நிலத்தை ஒரு சென்ட் 1 லட்சம் ரூபாய் என விலை பேசி, 60 லட்சத்திற்கு அன்புராஜாவிற்கு கிரையம் செய்து தருவதாக கூறினார். கிரையம் பத்திரம் தயார் செய்வதற்காக கடந்த 9-ந் தேதி பண்ருட்டி லாட்ஜில் மதியழகன் தங்கினார். அவருடன் ஏற்கனவே தைல மரவியாபாரம் செய்த நண்பர் பெரியகாட்டுப்பாளையம் செல்வா தங்கியிருந்தார்.
கடந்த 11-ந் தேதி காலை10 மணிக்கு செல்வாவின் காரில் மதியழகன், பெரியகாட்டுப்பாளையம் டிரைவர் சுதாகர், கார்த்திக் ஆகியோருடன் கம்மாபுரம் பத்திர பதிவு அலுவலகம் சென்றனர். அங்கு, கிரையம் முடிந்ததும், அன்புராஜா பண்ருட்டிக்கு வா மீதி பணம் தருகிறேன் என, மதியழகனிடம் கூறினார்.
அதன்பேரில், மதியழகன் மீண்டும் பண்ருட்டிக்கு அதே காரில் திரும்பிக் கொண்டிருந்தார். செம்மேடு கெடிலம் பாலம் அருகில் மதியழகன் இயற்கை உபாதைக்கு இறங்கினார். பின்னர் காரில் ஏறிய அவரை, செல்வா உள்பட 3 பேரும் மீதி 40 லட்சத்தை தர முடியாது எனக் கூறி, தாக்கி, கடத்திச் சென்று மேட்டுக்குப்பத்தை சேர்ந்த பட்டுராஜா மகன் சிவமணியின் முந்திரிதோப்பில் கட்டிப் போட்டு, கொலைமிரட்டல் விடுத்தனர்.
இதனிடையே கடந்த 13-ந் தேதி சிவமணியின் தந்தை பட்டுராஜா மற்றும் உறவினர்கள் முந்திரி தோப்பில் கட்டப்பட்டிருந்த மதியழகனின் கட்டை அவிழ்த்துவிட்டு பஸ்சில் ஏற்றி அனுப்பினர். படுகாயமடைந்த மதியழகன் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றார். அவர், கொடுத்த புகாரின்பேரில் செல்வா உட்பட 4 பேர் மீது காடாம் புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் வழக்குப் பதிந்து விசாரித்தில், 40 லட்சத்திற்காக மதியழகனை கடத்தியது தெரிய வந்தது.
இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட கார் டிரைவர் சுதாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் செல்வா, கார்த்திக், சிவமணி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது? என, விசாரித்து வருகின்றனர்.