உள்ளூர் செய்திகள்
வாடகை கட்டணத்தை வழங்க டிரைவர்கள் வலியுறுத்தல்
அரசு வேலைக்கு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வாகனத்தை வாடகைக்கு இயக்குகின்றனர்.
திருப்பூர்:
வாடகை கட்டணத்தை வழங்க கோரி சுற்றுலா வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2021 ஒப்பந்த அடிப்படையில் திருப்பூர் வடக்கு, மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதியில் வாகனங்கள் இயக்கினோம். இதற்கு இன்றுவரை வாடகை தொகை கொடுக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகளை பலமுறை சந்தித்து எடுத்துக்கூறியும் கண்டுகொள்ள வில்லை.
நாங்கள் இதற்கு பிறகு என்ன செய்வது என்றும் தெரியவில்லை. நாங்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலைமையில் உள்ளோம். தற்போது உள்ளாட்சி தேர்தலும் வந்துவிட்டது. எங்களுடைய வாகனத்தை மறுபடியும் கேட்டுள்ளார்கள். நாங்கள் வாகனத்தை தேர்தலுக்கு அனுப்ப தயாராக உள்ளோம்.
30.3.2021 அன்று முதல் 7.4.2021 வரை சட்டமன்ற தேர்தலுக்கு வாகனம் ஓட்டியதற்கு வாடகை தொகை கொடுக்க வேண்டும். அந்த தொகையை இப்போது கொடுத்தால், தற்போது உள்ளாட்சி தேர்தல் வாகனத்தை இயக்கி வாடகை தொகை தாமதமாக பெற்றுக் கொள்கிறோம்.
அரசு வேலைக்கு சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தும் வாகனத்தை வாடகைக்கு இயக்குகின்றனர். அந்த வாகனத்தை அரசு அதிகாரிகளுக்கு பயன்படுத்தகூடாது என்று உத்தரவிட வேண்டும். வணிக வாடகை வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.