உள்ளூர் செய்திகள்
கோவில் வாசல் முதல் ராஜகோபுரம் வரை பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் காட்சி.

தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் நாளை மாசிமக தேரோட்டம்

Published On 2022-02-15 15:13 IST   |   Update On 2022-02-15 15:13:00 IST
தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக பெருவிழா இந்த ஆண்டு கடந்த 8-ந்தேதி தொடங்கியது. நாளை தேரோட்டம் நடக்கிறது.
தென்காசி:

பிரசித்தி பெற்ற தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில்  ஆண்டுதோறும் மாசிமகப் பெருவிழா விமரிசையாக நடத்தப்படும்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 8-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் இரவில் சுவாமி-அம்பாள் வீதி எழுந்தருளல் நடைபெற்று வருகிறது.  7-ம் திருவிழாவான நேற்று கோவில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கோவில் வாயில் முன்பிருந்து கோபுர வாசல் வரை முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து காசிவிஸ்வ நாதர்-உலகம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 5 சப்பரங்கள் ரதவீதிகளில் வீதிஉலா சென்றவுடன் 7-ம் திருவிழா நிறைவு பெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்ட திருவிழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி காலை 5.40-க்கு மணிக்கு சுவாமி-அம்பாள் தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

தொடர்ந்து 9 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. முதலில் சுவாமி தேரும், பின்னர் அம்பாள் தேரும் வடம் பிடித்து இழுக்கப்படுகின்றன. தேர் 4 ரத வீதிகளிலும் சுற்றி மீண்டும் கோவில் நிலையை வந்து அடையும்.

தேரோட்டத்திற்காக இரண்டு தேர்களும் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொள் கிறார்கள். இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் செய்யப்பட்டுள்ளது.

Similar News