உள்ளூர் செய்திகள்
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்ட போவது யார்?
வேலூர் கோட்டையில் வெற்றிக்கொடி நாட்ட போவது யார்? அனல் தெறிக்கும் பிரசாரம் ஈடுபட்டுள்ள வேட்பாளர்கள்.
வேலூர்:
வேலூர் மாநகரம் சிப்பாய் புரட்சி மூலம் வரலாற்றுச்சிறப்புடன் திகழ்கிறது. வேலூர் கோட்டை வீரத்தின் அடையாளமாக இன்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் அளிக்கும் சிஎம்சி ஆஸ்பத்திரி, மிகப் பெரிய கல்வி நிறுவனமாக விளங்கும் விஐடி பல்கலைக் கழகம், வெளிமாநிலங்கள் வெளிநாட்டு பக்தர்களை தன்வசம் ஈர்க்கும் தங்கக்கோவில் ஆகியவற்றை தன் வசமாக்கி பல்வேறு பெருமைகளை கொண்டுள்ளது.
வேலூர் மாநகராட்சி கடந்த 2008-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலூர் சத்துவாச்சாரி தாராபடவேடு ஆகிய நகராட்சிகள் காட்பாடி, அல்லாபுரம் தொரப்பாடி பேரூராட்சிகள் பலவன்சாத்து குப்பம் ஆகிய ஊராட்சிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
அப்போது நகராட்சித் தலைவராக இருந்த திமுகவை சேர்ந்த கார்த்திகேயன் மாநகராட்சி மேயராக பதவி ஏற்றார்.
இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு வேலூர் மாநகராட்சி முதல் தேர்தலை சந்தித்தது. இதில் நேரடி மேயராக கார்த்தியாயினி அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது மாநகராட்சி மேயர் பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. 60 வார்டுகள் கொண்ட வேலூர் மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 7 மற்றும் 8வது வார்டுகளில் திமுகவை சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 58 வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி வாக்குப்பதிவு நடக்கிறது 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. திமுக அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெறும் நோக்கத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் கோட்டையை கைப்பற்ற போவது யார் என்ற போட்டியில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர் வீடு வீடாக சென்று வாக்குகளை சேகரித்த வண்ணம் உள்ளனர். வேலூர் மாநகராட்சியில் ஆண்கள் :1,99,208,பெண்கள், 2,15,001, திருநங்கைகள் 46,என மொத்தம் 4,14 255 பேர் உள்ளனர்.
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் 17 வார்டு அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் 6 வார்டு ஆற்காடு சட்டமன்ற தொகுதியில் ஒரு வார்டும் அடங்கியுள்ளது.
மாநகராட்சித் தேர்தலில் 354 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேலூர் மாநகராட்சியின் முக்கிய பிரச்சனையாக இருப்பது சாலைகள். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது வரை பல்வேறு இடங்களில் மூடப்படாமல் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன.
துவங்கப்படும் எந்த ஒரு பணியும் முடிக்கப்படாமல் அனைத்து இடங்களிலும் பணிகள் கிடப்பில் போடப்படுகின்றன. டபுள் ரோடு, ஆர்.டி.ஓ. ஆபீஸ் சாலை, பி.எப். அலுவலக தெரு மற்றும் மாநகராட்சியின் இணைப்பு பகுதிகள் விருதம்பட்டு ராஜீவ்காந்தி நகர் என மாநகரின் அனைத்து பகுதிகளும் குண்டும் குழியுமாக மேடு பள்ளங்களாக உள்ளன. இதனால் பாதசாரிகள் முதல் வாகன ஓட்டிகள் மழை காலங்களில் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்திற்கான தலைமை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி மாநகரில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அடுக்கம்பாறையில் அமைந்துள்ளது. மாநகர் பகுதிகளில் உள்ள மக்கள் மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து நெரிசலால் நீண்ட நேரம் ஆகிறது. அதோடு போதிய போக்குவரத்து இல்லாமல் உள்ளது. இதனால் அவசர சிகிச்சை தேவைப்படுவோரின் உயிரும் பறிபோகிறது.
மாநகரில் மட்டும் சுமார் 5 லட்ச மக்கள் வசித்து வரும் நிலையில் தொடர்ந்து மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, பழைய அரசு மருத்துவமனையான பெண்ட்லேண்ட் மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வேலூர் மாநகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் நாள்தோறும் விபத்து ஏற்படுகிறது. இதனை தடுக்கநிரந்தர தீர்வு வேண்டும்.
வேலூர் மாநகரில் பல வணிக நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகின்றது. அதோடு சென்னை பெங்களூரு ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு முக்கிய இணைப்பு பகுதியாக இருந்து வருகிறது வேலூர் மாநகர்.
இருசக்கர வாகனம் முதல் கனரக வாகனங்கள் வரை அளவுக்கதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் சாலைகளில் சுதந்திரமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அரங்கேறுகின்றன. கண்துடைப்புக்காக மாநகராட்சி நிர்வாகத்தால் அவ்வபோது அறிக்கை விடப்பட்டாலும் இதற்கான நிரந்திர நடவடிக்கை என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.
விலை மதிப்பற்ற உயிரை அசாதாரணமாக சுற்றித்திரியும் கால்நடைகளால் வரும் நாட்களில் இழக்க செய்யக்கூடாது என்பதில் வெற்றி பெறும் மேயர் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிப்படை வசதிகளான சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க வேண்டும். மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் அடங்கி வரும் 4 சட்டமன்ற தொகுதிகளும் தி.மு.க. வசமே உள்ளது. அதே போல மேயர் பதவியை தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் நெருக்கமான ஆதரவாளர்கள் அவர்களின் மனைவிகளுக்கு குறிவைக்கிறார்கள்.
ஒவ்வொரு வார்டிலும் கவுன்சிலர் வேட்பாளர்கள் மக்கள் செல்வாக்கு மற்றும் பண பலமுடைய அறிமுகம் மிக்க நபர்கள் களமிறங்கியுள்ளனர். வார்டுக்கு ரூ.2 கோடி வரை செலவு செய்ய வேட்பாளர்கள் தயாராக இருப்பதால் வெற்றி வாய்ப்பை பணம் தான் தீர்மானிப்பதாக உள்ளது. வேலூர் மாநகராட்சியில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் வார்டுகள் விவரம்:-
அதிமுக - கூட்டணி : 56
(அதிமுக -55
தமாகா- 1)
4 வார்டுகளில் வேட்புமனு தள்ளுபடி
==
திமுக - கூட்டணி : 60
(திமுக - 53
காங்கிரஸ்-3,
மதிமுக-1,
விடுதலை சிறுத்தை-1,)
இரண்டு வார்டுகளில் திமுக போட்டியின்றி தேர்வு (வார்டு 7,8)
==
பிஜேபி -34
பகுஜன் சமாஜ் கட்சி : 1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் : 3
இந்திய கம்யூனிஸ்ட் :1
அமமுக -18,
நாம் தமிழர்- 40,
பாமக -20,
தேமுதிக- 16,
எஸ்.டி.பி.ஐ - 4,
மக்கள் நீதி மய்யம் -10
தமிழ்நாடு இளைஞர் கட்சி :5
ஐ.ஜே.கே - 2
வெல்பர் பார்ட்டி : 1
மனித நேய ஜனநாயக கட்சி : 1
சுயேச்சை - 82