உள்ளூர் செய்திகள்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் தேரோட்டம்
வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் தேரை பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடிவீஸ்வரம் ஸ்ரீ அழகம்மன் சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மாசிப் பெருந்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, இரவு வாகன பவனியும், சிறப்பு அபிஷேகங்களும் நடந்து வருகிறது.
9-ம் திருவிழாவான இன்று (15-ந் தேதி) காலை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத் தொடர்ந்து அழகம்மன் தேரில் எழுந்தருளினார். தேர் சக்கரத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தேரோட்டம் நடந்தது.
பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 ரத வீதிகளிலும் இழுத்துவரப்பட்டு திருநிலைக்கு வந்தது. தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு 7 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமியும் அம்பாளும் சப்தவர்ண நிகழ்ச்சி நடக்கிறது.
10-ம் திருவிழாவான 16-ந் தேதி மாலை 4 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ஆராட்டு துறைக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் ஆராட்டுதுறையில் இருந்து மேளதாளங்களுடன் பவனி வருதல் நடக்கிறது.
நிகழ்ச்சியில் மீனாட்சிபுரம் அய்யப்ப பக்தர் சேவா சங்க தலைவர் சிவா, தோவாளை ஒன்றிய அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணைச் செயலாளர் கார்த்திக், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் சங்கர், என்ஜினியர் ராம் ஜெகநாத் மற்றும் திரளானவர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.