உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

நாகர்கோவில் ஊட்டுவாழ் மடம் பகுதியில் ரூ.1 கோடி செலவில் ரெயில்வே சுரங்க பாதை

Published On 2022-02-15 12:51 IST   |   Update On 2022-02-15 12:51:00 IST
நாகர்கோவில் ஊட்டுவாழ் மடம் பகுதியில் ரூ.1 கோடி செலவில் ரெயில்வே சுரங்க பாதை அமைக்கப்படவுள்ளது.
நாகர்கோவில்:

நாகர்கோவில்  ரெயில் நிலையத்துக்கு அருகே ஊட்டுவாழ்மடம் செல்லும் சாலையை சுரங்க நடைபாதையாக மாற்றம் செய்து அமைக்க பட்ஜெட்டில் ஒரு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத்தின் தலைவர் எஸ் ஆர் ஸ்ரீராம் கூறியதாவது:-

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு பின்புறம் உள்ள பகுதிகளான ஊட்டுவாழ்மடம், கருப்புக் கோட்டை, இலுப்பையடி ஆகிய பகுதிகளில் சுமார் 500 குடும்பங்கள் குறிப்பாக விவ சாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 
இவர்கள் நாகர்கோவில் நகருக்கு வரவேண்டுமானால் ரெயில்நிலையம் அருகில் உள்ள சாலை வழியாகதான் வரவேண்டியுள்ளது. 

இந்த பகுதியில் அதிக அளவில் விவசாய குடும்பங்கள் வசித்து வருவதால் விவசாயத்துக்கு தேவையான உரங்கள் மற்ற பொருட்கள் கொண்டு செல்ல இந்த சாலையைதான் இந்த பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.  இவ்வாறு வரும் போது ஆர்.ஆர்.ஐ. கேபின் அருகில் ஓர் ரெயில்வே கிராசிங் உள்ளது. இந்த கிராசிங் தினசரி அதிக நேரம் மூடியே இருக்கின்றது. 

இதனால் இந்த பகுதியை சார்ந்த மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். 
குறிப்பாக அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தனியார் வாகனங்களில் ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

இதனால் இந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டை மாற்றம் செய்து விட்டு சுரங்க நடைபாதை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைப்புகள், சமூக பொது நலசங்கங்கள், வணிகர் அமைப்புகள், ரெயில் பயணிகள் சங்கங்கள் என அனைவரும் ரெயில்வேதுறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். 

முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தெற்கு ரெயில்வே பொது மேலாளருடன் 2014-ம் ஆண்டு நாகர்கோவில் ரெயில் நிலையத்தை பார்வையிடும் போது இந்த பகுதியில் பொது மேலாளர் அவர்களை நேரடியாக கூட்டி கொண்டு சென்று பார்வையிட்டு இந்த பிரச்சனையை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் அவர்களுக்கு விளக்கி கொடுத்து உடனயாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

இதன் பலனாக இந்த வருட பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தற்போது சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டு இதற்காக ரூ. ஒரு கோடி நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அடுத்த மாதம் துவங்கப்பட இருக்கின்றது இதற்கு ஒப்பந்தபுள்ளி உடனடியாக கோரப்படும்.

தற்போது நாகர்கோவில் ரெயில் நிலையம் விரிவாக்க பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இந்த விரிவாக்க பணிகள் நடைபெறும் போது இந்த சுரங்க பாதை பணிகளும் சேர்த்தே நடைபெறும்.  இந்த சுரங்க நடைபாதை 10 மீட்டர் அகலமும், 5 மீட்டர் உயரத்திலும் அமைக்கப்பட இருக்கின்றது.

 இந்த சுரங்கபாதை பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு வரும் போது இந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் எந்த ஒரு சிரமமுமின்றி எளிதாக நாகர்கோவில் நகருக்கு பல்வேறு பணிகள் நிமித்தம் வந்த செல்ல முடியும்.

இந்த சுரங்க பாதை பணிகள் நிறைவு பெற்றுவிட்டால் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு இரண்டாவது நுழைவுவாயில் அமைக்க எளிதாக அமையும். இந்த வழியாக சென்றால் நான்கு வழி சாலைக்கு  எளிதாக செல்ல முடியும். இது மட்டுமில்லாமல் நாகர்கோவிலில் அறிவிக்கப்பட்டுள்ள பஸ்போர்ட் இதையொட்டி அமைவதால் இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News