உள்ளூர் செய்திகள்
கொலை

கோவையில் தே.மு.தி.க. பிரமுகர் கொலையில் 2 பேர் கைது

Published On 2022-02-15 10:47 IST   |   Update On 2022-02-15 10:47:00 IST
கோவையில் நிலப்பிரச்சினையில் தே.மு.தி.க. பிரமுகர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவுண்டம்பாளையம்:

கோவை சரவணம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது48). முன்னாள் தே.மு.தி.க மாவட்ட செயலாளர். இதுதவிர சரவணம்பட்டியில் பத்திர எழுத்தர் அலுவலகமும் நடத்தி வந்தார்.

இவருக்கு நல்லாம்பாளையம் பகுதியில் ஒரு இடம் இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த நிலத்தை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த முத்துக்குமார்(48) என்பவருக்கு விற்றார். இதற்காக அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பெற்று கொண்டு, இடத்திற்கான பவர் பத்திரமும் கொடுத்தார்.

இடத்தை விற்ற 6 மாதங்களிலேயே அவரை தொடர்பு கொண்ட பொன்னுசாமி, நீ கொடுத்த 50 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். என்னுடைய இடத்தை மீண்டும் கொடுத்து விடு என கூறினார். முத்துக்குமாரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இடத்தை கொடுத்து விட்டு, பணத்தை வாங்கி கொண்டார்.

இந்த நிலையில் நேற்று பொன்னுசாமியை தொடர்பு கொண்ட முத்துக்குமார், உங்களிடம் பேச வேண்டும் என கூறி அழைத்தார்.

பொன்னுசாமியும் தனது அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணுடன் நல்லம்பாளையத்திற்கு காரில் சென்றார். அங்கு முத்துக்குமார், அவரது நண்பர் ராஜன் மற்றும் பொன்னுசாமி ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர்.

திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்படவே கோபம் அடைந்த முத்துக்குமார், பொன்னுசாமியை கழுத்து, வயிற்றில் கத்தியால் குத்தினார். இதில் அவர் சரிந்து கீழே விழுந்து இறந்தார். இதை பார்த்த பொன்னுசாமியுடன் வந்த பெண் அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வரவே முத்துக்குமாரும், அவரது நண்பரும் தப்பியோடி விட்டனர்.

தகவல் அறிந்த தடாகம் போலீசார் விரைந்து வந்து, இறந்த பொன்னுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த பகுதியில் ஒரு வீட்டில் இருந்த சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகி இருந்தன. அதனை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பொன்னுசாமி, முத்துக்குமாருக்கு விற்ற நிலத்தை 6 மாதங்களிலேயே திரும்ப வாங்கியதால் அவர் மீது கோபம் இருந்தது. அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என நினைத்தார். இதற்காக பல யோசனைகளை செய்துள்ளார். அப்போது தான் நிலத்தை விற்கும் பாணியிலேயே அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.

அதன்படி நேற்று முத்துக்குமார் பொன்னுசாமியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, உங்களது இடத்தை நல்ல விலைக்கு வாங்குவதற்கு ஒரு ஆள் கிடைத்துள்ளது. அவர் நீங்கள் எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்.

உடனே நீங்கள் புறப்பட்டு வந்தால் பேசி முடிவு செய்து விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறினார்.

இதனை நம்பிய பொன்னுசாமியும், தன்னுடைய பத்திர அலுவலகத்தில் டைப்பிஸ்டாக வேலை பார்க்கும் ஸ்ரீபிரியா என்ற பெண்ணை அழைத்து கொண்டு காரில் நல்லம்பாளையம் கந்தன் நகர் பகுதிக்கு சென்றார். அங்கு முத்துக்குமார், தனது நண்பர் ராஜன் என்பவருடன் நின்றிருந்தார்.

இதையடுத்து பொன்னுசாமி காரில் இருந்து இறங்கி தன்னுடன் வந்த பெண்ணை காரிலேயே அமர்ந்திருக்குமாறும், நான் சென்று பேசி இடத்தை விற்று விட்டு வருகிறேன் என கூறி விட்டு சென்றார்.

பின்னர் பொன்னுசாமி, முத்துக்குமார் அருகே சென்றார். அப்போது முத்துக்குமார், இவர் எனது நண்பர் ராஜன், இவர் தான் உங்கள் நிலத்தை வாங்க உள்ளார் என கூறினார். இதையடுத்து 3 பேரும் ஒரு இடத்தில் அமர்ந்து பேசினர். அப்போது முத்துக்குமார் என்னிடம் விற்ற நிலத்தை எதற்காக மீண்டும் வாங்கினாய் என கேட்டார். இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரம் அடைந்த முத்துக்குமார், பொன்னுசாமியை கத்தியால் குத்தினார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனை காரில் இருந்து பார்த்த பொன்னுசாமியுடன் வந்த ஸ்ரீபிரியா காரை விட்டு இறங்கி அருகே ஓடி வந்தார். பெண் ஓடிவருவதை பார்த்ததும் முத்துக்குமாரும், அவரது நண்பரும் தாங்கள் மாட்டிக்கொள்வோம் என நினைத்து, அந்த பெண்ணை நோக்கி கத்தியை எடுத்து கொண்டு ஓடி வந்தனர்.

பயந்து போன பெண் அலறி அடித்து கொண்டு அருகே உள்ள குடியிருப்புக்கு சென்று, மக்களிடம் தெரிவித்தார். பின்னர் மக்களுடன் சம்பவ இடத்திற்கு வந்தார். ஆட்கள் அதிகமாக வருவதை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பியோடியதும் தெரியவந்தது.

இதற்கிடையே நேற்று இரவு அதே பகுதியில் பதுங்கி முத்துக்குமாரையும், அவரது நண்பரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்கள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News